காசிமேடு மீன் சந்தையை வேறு இடத்துக்கு மாற்ற தடை: ஐகோர்ட்டு உத்தரவு

காசிமேடு மீன் சந்தையை வேறு இடத்துக்கு மாற்ற இடைக்கால தடைவிதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
காசிமேடு மீன் சந்தையை வேறு இடத்துக்கு மாற்ற தடை: ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை:

சென்னை ராயபுரத்தை சேர்ந்த அருண்குமார், செந்தில்குமார், சுப்பிரமணியன் உள்பட பலர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

காசிமேடு கடற்கரையில் பல ஆண்டுகளாக மீன்களை மொத்தமாக விற்பனை செய்து வருகிறோம். இந்த இடம், சென்னை துறைமுகத்துக்கு சொந்தமானது. ஏற்கனவே மீனவர்களுடன், சென்னை துறைமுகம் நிர்வாகம் 1988-ம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது. அதில், மீன் வியாபாரம் செய்யும் மீனவர்களுக்கு எந்த தொந்தரவும் செய்யமாட்டோம் என்று உத்தரவாதம் அளித்துள்ளது.

இந்த நிலையில், தமிழக மீன்வளத்துறை மீன் வியாபாரம் செய்வதற்காக புதிய கட்டிடத்தை கட்டியது. இந்த கட்டிடம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திறக்கப்பட்டது. ஆனால், அந்த கட்டிடத்தில் மீன் வியாபாரிகளுக்கான அடிப்படை வசதிகள் பல இல்லை. ஐஸ் தொழிற்சாலை, ஐஸ் உடைக்கும் எந்திரம், குளிர்சாதன வசதிகள் சரிவர செய்து தரப்படவில்லை.

இந்த சூழ்நிலையில், ஏற்கனவே உள்ள மீன் சந்தையில் இருந்து இந்த புதிய கட்டிடத்துக்கு வருகிற 15-ந்தேதிக்குள் மாறவேண்டும். அவ்வாறு மாறவில்லை என்றால் மானிய விலையில் தரப்படும் டீசல் நிறுத்தப்படும் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் மிரட்டுகின்றனர்.

இந்த புதிய கட்டிடத்துக்கு மீன் வியாபாரிகள் சென்றால், எங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கும். எனவே, காசிமேடு மீன் சந்தையை வேறு இடத்துக்கு மாற்ற தடைவிதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.துரைசாமி, ‘மனுவுக்கு 4 வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை துறைமுகம் தலைவர், மீன்வளத்துறை ஆணையர் உள்ளிட்டோருக்கு நோட்டீசு அனுப்பவும், அதுவரை, தற்போதைய நிலையே தொடரவேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

தற்போதைய நிலையே தொடரவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளதால், ஏற்கனவே உள்ள இடத்தில் இருந்து புதிய இடத்துக்கு மீன் சந்தையை மாற்றுவதற்கு இடைக்கால தடை ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com