போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜுக்கு ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்ற கிளை

திருச்சியில் வாகன சோதனையில் பெண் உயிரிழந்த வழக்கில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஜாமீன் வழங்கியது.
போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜுக்கு ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்ற கிளை
Published on

மதுரை:

திருச்சியில் வாகன சோதனையின் போது போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் துரத்திச் சென்றதில் ஏற்பட்ட விபத்தில் உஷா என்பவர் பலியானார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக திருச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் காமராஜ் ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். அதில் அவர் கூறி இருந்ததாவது:-

கடந்த மார்ச் 7 -ந் தேதி திருச்சி தஞ்சாவூர் சாலையில் துவாக்குடி அருகே வாகன சோதணையில் ஈடுபட்டேன். அப்போது ராஜா என்பவர் தனது மனைவியோடு இரு சக்கர வாகனத்தில் நிற்காமல் சென்றார். அப்போது ராஜாவின் வாகனம் விபத்திற்குள்ளானது.

இந்த வாகனத்தை நான் துரத்தி சென்று விரட்டி மிதித்ததால் தான் விபத்து ஏற்பட்டு உஷா பலியானார் என திருச்சி பாய்லர் பிளாண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஆனால் அவர் இரு சக்கர வாகனத்தில் முன் பகுதியில் கிரைண்டர் வைத்து ஓட்டி சென்றதால் தான் விபத்து ஏற்பட்டது. எனவே எனக்கும் விபத்திற்கும் தொடர்பில்லை. நான் 35 நாட்களாக சிறையில் உள்ளேன்.

வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன், எனவே எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்.

மேற்கண்டவாறு மனுவில் அவர் கூறியிருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதி சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரரின் வக்கீல் கூறுகையில், காமராஜ் தொடர்ந்து 35 நாட்களாக சிறையில் உள்ளார். ஆனால் புகார்தாரர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார். எனவே காமராஜுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றார்.

இதை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் காமராஜுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி சுவாமிநாதன் உத்தர விட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com