தி.மு.க.வின் மனித சங்கிலி போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி வழங்க மறுத்த உத்தரவுக்கு ஐகோர்ட்டு தடை

தி.மு.க. மனித சங்கிலி போராட்டத்துக்கு அனுமதி வழங்க மறுத்து சேலம் போலீஸ் கமிஷனர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தி.மு.க.வின் மனித சங்கிலி போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி வழங்க மறுத்த உத்தரவுக்கு ஐகோர்ட்டு தடை
Published on

சென்னை:

சென்னை ஐகோர்ட்டில், தி.மு.க. சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் தூர்வாரும் பணியை எங்கள் கட்சி தொண்டர்கள் செய்துவருகின்றனர். இதன்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள கச்சராயன்குட்டை ஏரியை தி.மு.க. தொண்டர்கள் தூர்வாரினார்கள். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியில் உள்ள இந்த ஏரியை கடந்த 8-ந்தேதி தூர்வாரி முடித்தனர்.

ஆனால் ஆளுங்கட்சி நிர்வாகிகள் போலீசாருடன் கூட்டுசேர்ந்து, தூர்வாரப்பட்ட ஏரியில் இருந்து மண்ணை எடுக்க தொடங்கினார்கள். இதுகுறித்து தி.மு.க. நிர்வாகி சிவலிங்கம் அரசு உயர் அதிகாரிகளிடம் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அந்த ஏரியை பார்வையிட நேற்று சேலம் சென்றபோது போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

மனித சங்கிலி போராட்டத்துக்கு அனுமதி இல்லை என்று கூறி, மு.க.ஸ்டாலினை சேலம் மாவட்டத்துக்குள் நுழையவிடாமல் தடுத்து கைது செய்துள்ளனர். ஆனால், அவர் தூர்வாரப்பட்ட ஏரியை முதலில் பார்வையிட இருந்தார். பின்னர் மாலை 4 மணிக்கு மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்க இருந்தார்.

அமைதியான முறையில் மனித சங்கிலி போராட்டம் நடத்த போலீசார் ஏன் அனுமதி வழங்க மறுக்கின்றனர்? என்பது எங்களுக்கு தெரியவில்லை. கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனே விடுவிக்க உத்தரவிட வேண்டும். தி.மு.க.வின் மனித சங்கிலி போராட்டத்துக்கு அனுமதி வழங்க மறுத்து சேலம் போலீஸ் கமிஷனர் பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், மாநில குற்றவியல் தலைமை வக்கீல் ராஜரத்தினம் ஆஜராகி, ‘மனித சங்கிலி போராட்டத்தை நடத்த இன்று (நேற்று) மாலை 4 மணி வரை அனுமதி வழங்க மறுத்து சேலம் போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். தற்போது 4 மணியை கடந்துவிட்டதால், போலீஸ் கமிஷனரின் உத்தரவுக்கு தடைவிதிக்க தேவையில்லை. கைதான அனைவரையும் போலீசார் விடுவித்துவிட்டனர்’ என்றார்.

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சண்முகசுந்தரம், ‘பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்டவைகளுக்கு அனுமதி கேட்டு பல நாட்களுக்கு முன்பே மனு கொடுக்கப்பட்டாலும், கடைசி நேரத்தில் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க மறுத்து உத்தரவு பிறப்பிக்கும் வழக்கத்தை போலீஸ் அதிகாரிகள் கொண்டுள்ளனர். எனவே, இதுதொடர்பான விதிமுறைகளை ஐகோர்ட்டு வகுக்கவேண்டும்’ என்று வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதி, மனித சங்கிலி போராட்டத்துக்கு அனுமதி வழங்க மறுத்து சேலம் போலீஸ் கமிஷனர் பிறப்பித்த உத்தரவுக்கு ஆகஸ்டு 17-ந்தேதி வரை இடைக்கால தடை விதிப்பதாக உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை ஆகஸ்டு 17-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com