

நெல்லை:
தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு பருவமழை சரிவர பெய்யவில்லை. நெல்லை மாவட்டத்தில் பருவ மழை பொய்த்ததால் அணைகளில் குறைந்த அளவு தண்ணீரே உள்ளது. குளங்கள் வறண்டு காணப்படுகின்றன. இந்த நிலையில் கடந்த சில நாட்க ளாக நெல்லை மாவட்ட மலைப்பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
கடந்த 2 நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் அதிகளவு மழை பெய்ததால் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று பாபநாசம், தென்காசி, குற்றாலம், செங்கோட்டை சுற்று வட்டார பகுதிகளிலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் நேற்று மாலை முதல் மழை பெய்து வருகிறது. இதனால் நேற்று இரவு முதல் குற்றாலம் மெயினருவி மற்றும் ஐந்தருவியில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.
தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் மெயினருவி மற்றும் ஐந்தருவியில் தண்ணீரின் வேகம் அதிகரித்துள்ளது. மெயினருவியில் பாதுகாப்பு வளையத்தை கடந்தும், ஐந்தருவியில் 5 கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு போலீசார் தடைவிதித்துள்ளனர்.
இதனால் அருவிகளில் குளிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் தென்காசி, குற்றாலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் குளிர்ச்சியான காலநிலை நிலவி வருகிறது.
அணை பகுதிகளில் அதிகபட்சமாக குண்டாறு அணையில் 22 மில்லி மீட்டரும், பாபநாசம் அணையில் 17 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் 60 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 701 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 554 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 64.30 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 626 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 32.40 அடி யாகவும், கடனா அணையின் நீர்மட்டம் 54.80 அடியாகவும், ராமநதியின் அணையின் நீர்மட்டம் 64 அடியாகவும், கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 32.15 அடியாகவும், குண்டாறு அணை நீர்மட்டம் 36.10 அடியாகவும், அடவி நயினார் அணை நீர்மட்டம் 88 அடியாகவும் உள்ளது.
அணை பகுதி மற்றும் தாலுகா பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
குண்டாறு- 22, பாபநாசம்-17, செங்கோட்டை-8, தென்காசி-6.4, கருப்பாநதி-6, அம்பை-5, கடனா அணை-4, சேர்வலாறு-3, ராமநதி-3, ஆய்க்குடி-3, பாளை-1.4