பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து - ஐகோர்ட் முக்கிய உத்தரவு

பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணிக்கு நடத்தப்பட்ட தேர்வை ரத்து செய்து அரசு பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட் மதுரை கிளை தடை விதித்துள்ளது.
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து - ஐகோர்ட் முக்கிய உத்தரவு
Published on

சென்னை:

தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு 1,058 பேராசிரியர்களை தேர்வு செய்வதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ந் தேதி தகுதித்தேர்வு நடைபெற்றது.

இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 33 ஆயிரம் பேர் எழுதினர். தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து, தேர்வர்கள் சான்றிதழ் பரிசீலனைக்கு வருமாறு அழைக்கப்பட்டனர். ஆனால், அதிக மதிப்பெண் எடுத்த பெரும்பாலானவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படவில்லை.

இதைத்தொடர்ந்து அவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் புகார் மனு அளித்தனர். விசாரணையில் இதில் பெருமளவில் மோசடி நடைபெற்றது தெரியவந்தது. 57 மதிப்பெண் எடுத்தவர்கள் 140 மதிப்பெண்கள் எடுத்தது போன்றும், 150-க்கும் அதிகமான மதிப்பெண் பெற்றவர்கள் 70 முதல் 80 மதிப்பெண் பெற்றதாகவும் திருத்தம் செய்யப்பட்டு இருந்தது.

மதிப்பெண் பட்டியலை ஸ்கேன் செய்யும்போது இவ்வாறு திருத்தங்கள் செய்துள்ளனர். திருத்தங்களுக்கு ஏற்ப ஒவ்வொருவரிடமும் இருந்தும் தலா ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை லஞ்சம் பெற்று இருப்பதாகவும் கூறப்பட்டது.

இதனையடுத்து, தேர்வு முடிவில் முறைகேடு நடந்திருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளர் உமா, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்படி, இந்த மோசடியில் தொடர்புடைய 8-க்கும் மேற்பட்டோரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்திருந்தனர். 

முறைகேடுகள் கண்டறியப்பட்ட நிலையில், தேர்வை ரத்து செய்வதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடியாக அறிவித்தது. மறுதேர்வுக்கான அறிவிப்பு மே மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்றும், ஆகஸ்ட் மாதம் தேர்வு நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தேர்வை ரத்து செய்ததற்கு எதிராக ஐகோர்ட் மதுரை கிளையில் கடந்த 13-ம் தேதி இளமதி என்பவர் மனுதாக்கல் செய்திருந்தார். அதில், “200 பேர் முறைகேட்டில் ஈடுபட்டதற்காக மொத்த தேர்வையும் ரத்து செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, அரசின் தேர்வு ரத்து உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டிருந்தது.

எழுத்துத்தேர்வு முறையாக நடைபெற்றுள்ளது, மதிப்பெண் பதிவேற்றம் செய்வதில்தான் முறைகேடு நடந்துள்ளது என அரசுத்தரப்பு பதில் மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த மனு, இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அரசின் தேர்வு ரத்து உத்தரவுக்கு தனி நீதிபதி தடை விதித்தார். தவறு செய்த 200 பேரை தவிர மற்றவர்களின் மதிப்பெண்களை மதிப்பீடு செய்ய வேண்டும் என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார். 

முன்னதாக, இனி தேர்வு சம்பந்தப்பட்ட எந்த பணிகளிலும் தனியார் நிறுவனங்களை ஈடுபடுத்தப்பட போவதில்லை என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. #TamilNews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com