

மதுரை:
மதுரையைச் சேர்ந்த மாணவன் சிபி சார்பில் அவரது தந்தை வழக்கறிஞர் கண்ணன் உயர்நீதிமன்ற மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், இந்தியா முழுவதும் நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவம், பல் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும். அதன்படி தமிழகத்தில் நீட் தேர்வு முடிவின் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும்.
இந்நிலையில் தமிழகத்தில் மருத்துவம், பல் மருத்துவம் மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் பயின்றவர்களுக்கு 85 சதவீத இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு ஜூன் 22-ந் தேதி அரசாணை பிறப்பித்துள்ளது. எஞ்சிய 15 சதவீத இடங்களில் மட்டுமே மத்திய அரசு பாடத்திடம் மற்றும் பிற பாடத்திட்டங்களில் பயின்ற மாணவர்கள் சேர்க்கப்படுவர் என அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் பின்தங்கிய நிலையில் கடைசி நேரத்தில் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தில் பயின்று நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பாதிக்கப்படுவர். எனவே 85 சதவீத இட ஒதுக்கீட்டு அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று நீதிபதி மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் இந்த அரசாணை குறித்து விளக்கம் கேட்டு பதில் கூற தமிழக அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற 5-ந் தேதி (புதன்கிழமை) ஒத்திவைத்தனர்.