பணப்பட்டுவாடா புகார்: வழக்கு விவரத்தை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா தொடர்பாக, காவல்துறை பதிவு செய்த வழக்கு விவரங்களை தாக்கல் செய்யும்படி அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
பணப்பட்டுவாடா புகார்: வழக்கு விவரத்தை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
Published on

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா தொடர்பாக, சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் வைரக்கண்ணன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலை தள்ளிவைத்து கடந்த ஏப்ரல் 10-ந்தேதி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதேநேரம் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து தேர்தல் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது, இந்திய தேர்தல் ஆணையமோ, வருமான வரித்துறையோ நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

இதையடுத்து இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்விகள் கேட்டு விண்ணப்பம் செய்தேன். அதில், வாக்காளர்களுக்கு ஓட்டுக்காக பணம் கொடுத்த டி.டி.வி.தினகரன், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, தங்கமணி, விஜயபாஸ்கர் ஆகியோர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

அப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அதற்கு என்ன காரணம்? இந்த தேர்தல் மோசடி குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட திட்டம் உள்ளதா? அ.தி.மு.க. அம்மா அணியின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் திட்டம் உள்ளதா? என்பது உள்பட 8 கேள்விகள் கேட்டிருந்தேன்.

அதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், டி.டி.வி.தினகரன், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யவேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி ஆகியோர் புகார் செய்ய வேண்டும் என்று கடந்த ஏப்ரல் 18-ந்தேதி உத்தரவிட்டுள்ளதாக கூறியிருந்தது.

ஆனால், அவ்வாறு போலீசில் புகார் செய்ய எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல், தலைமை தேர்தல் அதிகாரியும், ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரியும் அமைதியாக இருந்து வருகின்றனர்.

எனவே, தேர்தல் கமி‌ஷன் உத்தரவின்படி, டி.டி.வி.தினகரன், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மீது இந்த அதிகாரிகள் புகார் செய்யவேண்டும். அந்த புகாரின் அடிப்படையில் சென்னை போலீஸ் கமி‌ஷனர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகையை சம்பந்தப்பட்ட கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று இந்த ஐகோர்ட்டு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா தொடர்பாக ஏற்கனவே வழக்குப்பவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதாக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். ஆனால், பணப்பட்டுவாடா தொடர்பான எப்.ஐ.ஆர். முழுமையாக இல்லை என்றும், யார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது? என்று குறிப்பிடப்படவில்லை என்றும் மனுதாரரின் வழக்கறிஞர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com