நிர்மலாதேவி வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற முடியாது- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

சி.பி.சி.ஐ.டி. விசாரணை இறுதி கட்டத்தை அடைந்ததால் பேராசிரியை நிர்மலா தேவி வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற முடியாது என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மதுரை ஐகோர்ட்
மதுரை ஐகோர்ட்
Published on

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியின் உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி, அதே கல்லூரி மாணவிகள் சிலரை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் மதுரை காமராஜர் கல்லூரி உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கை விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச் செயலாளர் சுகந்தி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

நிர்மலாதேவி வழக்கில் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பலருக்கு தொடர்புள்ளது. ஆனால் அவர்களின் பெயர்கள் வழக்கில் சேர்க்கப்படவில்லை. யாருக்காக அவ்வாறு செய்தார் என விசாரிக்கவில்லை. சி.பி.சி.ஐ.டி. போலீசார் நியாயமாக விசாரிக்காமல் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோர்ட்டில் இறுதி அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். எனவே நிர்மலாதேவி வழக்கை சி.பி.சி.ஐ.டி. வசமிருந்து சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என மனுவில் கூறி இருந்தார்.

இந்த வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் ஏற்கனவே ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இறுதி அறிக்கை மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டதோடு வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு விசாரிக்க இடைக்கால தடையும் விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் நீதிபதிகள் சத்திய நாராயணன், புகழேந்தி முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், மாணவிகளிடம் 164 பிரிவின் கீழ் மாஜிஸ்திரேட்டு முன்பாக வாக்குமூலம் பெறவில்லை. மேலும் பேராசிரியை நிர்மலாதேவி யாருக்காக மாணவிகளிடம் அவ்வாறு பேசினார் என்பது குறித்து விசாரணை நடத்தப்படவில்லை.

இந்த நிலையில் விசாரணை தொடர்ந்து நடைபெற்றால் சரியான தீர்வு கிடைக்காது. ஆகவே, வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

அதற்கு அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் ஏற்கனவே மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. வழக்கு விசாரணை முறையாகவே நடைபெற்று வருகிறது. ஆகையால் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், சி.பி.சி.ஐ.டி. விசாரித்து குற்றப்பத்திரிக்கை மற்றும் இறுதி அறிக்கை தாக்கல் செய்து வழக்கு இறுதிக் கட்டத்தில் உள்ளது.

இந்த நிலையில் இதில் நீதிமன்றம் தலையிட வேண்டியதில்லை. மேலும், சாட்சிகளின் அடிப்படையில் கூடுதலாக குற்றவாளிகளைச் சேர்ப்பதற்கு விசாரணை நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com