

புதுவை மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-
நியமன எம்.எல்.ஏ.க்களை மத்திய அரசு நேரடியாக நியமிக்க கூடாது என்று முதலில் காங்கிரசார் கூறினார்கள். அதற்காக சென்னை ஐகோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தார்கள்.
மத்திய அரசு எம்.எல்.ஏ.க்களை நியமித்த பிறகு அந்த நியமனமே தவறு என்று கூறினார்கள். அதன் பிறகு கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்தது செல்லாது என்றார்கள்.
தற்போது சபாநாயகர் தனக்கு நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான அதிகாரம் படைத்தவரிடம் இருந்து எந்த உத்தரவும் வரவில்லை என்கிறார்கள். அப்படி என்றால் எம்.எல்.ஏ.க்கள் நியமனத்தை ஏன் அரசிதழில் வெளியிட்டார்கள்?
முன்னுக்கு பின் முரணாக காங்கிரஸ் ஆட்சியாளர்கள் தொடர்ந்து பேசி வருகிறார்கள். புதுவை சட்டமன்றத்தை கூட்டும் அதிகாரம் யாரிடம் உள்ளது? கவர்னரின் அனுமதி இல்லாமல் சட்டமன்றத்தை மீண்டும் கூட்ட முடியுமா?
சட்டமன்றத்தையே கூட்ட உத்தரவிடும் அதிகாரம் உள்ள கவர்னருக்கு பதவி பிர மாணம் செய்ய அதிகாரம் இல்லையா? புதுவையில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் டெல்லி கட்சி மேலிடத்துக்கும், மத்திய உள்துறைக்கும் தொடர்ந்து தெரிவித்து வருகிறோம்.
டெல்லியில் யாரை சந்திக்க முதல்-அமைச்சரும், சபாநாயகரும் செல்கிறார்கள்? எந்த முகத்தை வைத்துக் கொண்டு மத்திய உள்துறை மந்திரியை சந்திப்பார்கள்?
நாராயணசாமிக்கும், வைத்திலிங்கத்துக்கும் இடையே அரை நூற்றாண்டு கால அரசியல் பகை உள்ளது. அந்த பகையை நியமன எம்.எல்.ஏ. விவகாரத்தின் மூலம் தீர்த்துக் கொள்ள வைத்திலிங்கம் முயற்சிக்கிறார்.
இதற்காக ஆட்சியை சீர் குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனை அரியாதவராக நாராயணசாமியும், அமைச்சர்களும் உள்ளனர். ஆட்சியை கலைப்போம் என்று நாங்கள் எங்கும் சொல்லவில்லையே. காங்கிரசார் எங்களிடம் 23 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளது என்று கூறுகிறார்கள்? அப்படியே இருந்தாலும் எப்படி 23 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருக்க முடியும். காங்கிரஸ், தி.மு.க.வை சேர்த்து 17 எம்.எல்.ஏ.க்கள் தானே இருக்கிறார்கள். மீதமுள்ள 6 எம்.எல்.ஏ.க்கள் யார்?
ஆட்சியை காப்பாற்ற காங்கிரசார் இப்போதே குதிரை பேரம் நடத்தி வருகிறார்கள். அரசை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் பட்டியலை நாராயணசாமி வெளியிட வேண்டும்.
சட்டமன்ற செயலாளர் யார் தன்னை நியமன எம்.எல்.ஏ.வாக அங்கீகரிக்க வேண்டும் என கடிதம் கொடுத்தாலும் பெற்றுக் கொள்வாரா? அவர்களிடம் மத்திய அரசு உத்தரவு உள்ளதா என கேட்க மாட்டாரா? இது தொடர்பாக மத்திய உள்துறையிடம் புகார் செய்துள்ளோம். மேலும், சட்ட மன்ற செயலாளர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவும் உள்ளோம்.
அன்பழகன் நாள்தோறும் ஏதாவது ஒரு அறிக்கையை கொடுத்து வருகிறார். அன்பழகன் காங்கிரசாரிடம் விலை போய் விட்டாரோ என்ற சந்தேகம் உள்ளது. நாராயணசாமி கூறும் 23 எம்.எல்.ஏ.க்களில் அன்பழகனும் மற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் உள்ளனரா?
இவ்வாறு சாமிநாதன் கூறினார்.