அரியானா கலவரம்: முதல்-மந்திரி கட்டாரை நீக்க மாட்டோம் - பா.ஜனதா அறிவிப்பு

அரியானா முதல்-மந்திரி கட்டாரை நீக்கும் திட்டமில்லை, அவர் முதல்-மந்திரி பதவியில் தொடர்ந்து நீடிப்பார் என்று பா.ஜனதா அறிவித்துள்ளது.
அரியானா கலவரம்: முதல்-மந்திரி கட்டாரை நீக்க மாட்டோம் - பா.ஜனதா அறிவிப்பு
Published on

புதுடெல்லி:

தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மித் ராம் ரகீம்சிங் பாலியல் வழக்கில் குற்றவாளி என்று அரியானாவின் பஞ்ச்குலாவில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டு நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது.

இதனால் அவரது ஆதரவாளர்கள் பயங்கர வன்முறையில் ஈடுபட்டனர். அரியானா, பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட 5 மாநிலங்களில் கலவரம் வெடித்தது. கலவரத்தில் 36 பேர் பலியாகி உள்ளனர். வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

அரியானாவில் ஏற்பட்ட இந்த கலவரத்தால் ஆளும் பா.ஜனதாவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. தேரா சச்சா சவுதா அமைப்பினரின் வன்முறையை கட்டுப்படுத்த முதல்-மந்திரி மனோகர்லால் கட்டார் தவறி விட்டார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. மேலும் அவரை முதல்வர் பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

மேலும் அம்மாநில ஐகோர்ட்டு பா.ஜனதா அரசை கடுமையாக விமர்சித்தன.

இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை பா.ஜனதா மேலிடம் நிராகரித்தது. அரியானா முதல்-மந்திரி கட்டாரை நீக்கும் திட்டமில்லை, முதல்-மந்திரி பதவியில் அவர் தொடர்ந்து நீடிப்பார் என்றும் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக பா.ஜனதா பொதுச் செயலாளரும், அரியானா மாநில மேலிட பொறுப்பாளருமான அனில்ஜெயின் கூறியதாவது:-

குர்மித்தை கோர்ட்டுக்கு அழைத்து வந்து தீர்ப்புக்கு பிறகு சிறைக்கு கொண்டு சென்ற பணியானது மிகவும் சவாலானது.

அவரை கோர்ட்டுக்கு அழைத்து வரும் முன்பு படைபலத்தை மாநில அரசு பயன்படுத்தி இருந்தால் நிலைமை மிகவும் மோசமாய் இருக்கும். அப்படியொரு சூழ்நிலை உருவாகி இருந்தால் குர்மித் தாமாக முன்வந்து நீதிமன்றத்தில் ஆஜராகி இருக்க மாட்டார்.

கோர்ட்டுக்கு அவர் வருவதற்கு முன்பு எந்த மோதலும் ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை. கலவரம் உருவான சூழ்நிலைக்கு கட்டுக்கடங்காத கும்பலும் காரணமாகும்.

கலவரத்தில் உயிர்சேதம், பொருட்சேதம் ஏற்பட்டு இருப்பது துரதிருஷ்ட வசமானது. ஆனால் 36 மணி நேரத்துக்குள் சிறிய அளவிலான பாதிப்புக்குள் மாநில அரசு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்து விட்டது.

இந்த கலவரம் தொடர்பாக அரியானா முதல்-மந்திரி மனோகர்லால் கட்டாரை கட்சி மேலிடம் டெல்லிக்கு வருமாறு அழைத்து உள்ளதாக தகவல் வதந்தியே. இதில் எந்த உண்மையும் இல்லை.

முதல்-மந்திரி பதவியில் இருந்து கட்டாரை நீக்கும் திட்டம் எதுவும் பா.ஜனதாவிடம் இல்லை. கோர்ட்டு தீர்ப்பை செயல்படுத்த மாநில அரசு முன்னுரிமை கொடுத்து வருகிறது. குர்மித்துக்கு அதிகமான ஆதரவாளர்கள் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com