உண்ணாவிரதத்தை ஜீயர் கைவிட வேண்டும்: எச். ராஜா வலியுறுத்தல்

ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து பேசியதற்கு வருத்தம் தெரிவிக்க கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.
உண்ணாவிரதத்தை ஜீயர் கைவிட வேண்டும்: எச். ராஜா வலியுறுத்தல்
Published on

ராஜபாளையத்தில் கடந்த மாதம் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து பேசினார். இது இந்துக்கள் மற்றும் இந்து அமைப்பினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

வைரமுத்து தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் சடகோபால ராமானுஜ ஜீயர் வலியுறுத்தினார்.

தனது கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தார். பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று அவர் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார்.

பிப்ரவரி 3-ந் தேதிக்குள் வைரமுத்து வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கெடு விடுத்திருந்தார். கெடு முடிந்த பின்னரும் வைரமுத்து வருத்தம் தெரிவிக்கவில்லை.


எனவே சடகோபால ராமானுஜ ஜீயர் ஸ்ரீவில்லிபுத்தூரில் நேற்று மீண்டும் உண்ணாவிரதத்தை தொடங்கினார். உண்ணாவிரதம் இருந்து வரும் ஜீயரை, பாரதிய ஜனதா தேசிய செயலாளர் எச். ராஜா இன்று சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிடும்படி கேட்டுக் கொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆண்டாள் குறித்து வைரமுத்து பேசிய கருத்துக்கு ஆதாரமாக மேற்கோள் எதுவும் இல்லை. அவர் பொய்யான, சந்தேகமான விதைகளை தூவுகிறார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகள் அழிக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கிறேன்.

ஜீயர் தனது உடலை வருத்தி உண்ணாவிரதம் இருக்க தேவையில்லை. கட்டுரைகளின் முடிவில் சம்பந்தப்பட்டவர்களை இழிவுபடுத்துவது வைரமுத்துவின் வாடிக்கை.

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு விஜயேந்திரர் எழுந்திருக்கவில்லை என்று கூறினார்கள். ஆனால் செம்மொழி மாநாட்டில் கருணாநிதி எழுந்திருக்கவில்லை. இதை பெரிதுபடுத்தாதவர்கள் விஜயேந்திரர் விவகாரத்தை ஏன் பெரிதுபடுத்துகிறார்கள்?

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com