மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்துக்கு சதிச்செயல் காரணமாக இருக்கலாம்: எச்.ராஜா

மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்துக்கு சதிச்செயல் காரணமாக இருக்கலாம் என பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார். #MeenakshiAmmanTemple
மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்துக்கு சதிச்செயல் காரணமாக இருக்கலாம்: எச்.ராஜா
Published on

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கிழக்கு ராஜகோபுர பகுதியில் இருந்து சுவாமி சன்னதிக்கு செல்லும் வழியில் வீரவசந்தராயர் மண்டபமும், ஆயிரங்கால் மண்டபமும் உள்ளன.

இந்த பகுதியில் 50-க்கும் மேற்பட்ட கடைகள் இருந்தன. கடந்த 2-ந்தேதி இரவு இங்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 36 கடைகள் எரிந்து சாம்பலானது. வீரவசந்தராயர் மண்டபமும் பலத்த சேதம் அடைந்தது. அதன் மேற்கூரைகள் இடிந்து விழுந்தன.

தீ விபத்து குறித்து போலீஸ் கமி‌ஷனர் மகேஷ்குமார் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா இன்று காலை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தார். அவர் கோவிலுக்கு சென்று தீ விபத்து ஏற்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். தீ விபத்து குறித்து அவரிடம் அதிகாரிகள் விளக்கி கூறினர்.

ஆய்வுப்பணி முடிந்ததும் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 2-ந் தேதி இரவு உலக மக்கள் வழிபடக்கூடிய மீனாட்சி-சுந்தரேசுவரர் ஆலயத்தில் மிகப்பெரிய தீ விபத்து நடந்துள்ளது. இந்த தீப்புகை கிளம்பும் போது அதை 4 பேர் பார்த்துள்ளனர். ஆனால் அவர்கள் தீயை அணைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

எனவே தான் அது விபத்தா? அல்லது சதியா? என்று எண்ணத் தோன்றுகிறது. ஒரு இடத்தில் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக அதை அணைக்க முயல்வது தான் மனித செயல். அது தான் மனிதாபிமானத்துடன் கூடிய வி‌ஷயமாகும்.

எனவே தீ விபத்து தொடர்பான சி.சி.டி.வி. கேமிரா பதிவு யாரிடம் உள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது.


கடந்த 2 மாதமாக தமிழகம் முழுவதும் கோவில்களுக்கு சென்று பார்வையிட்டு வருகிறேன். 38 ஆயிரத்து 675 கோவில்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில் ஸ்தலங்களே இல்லை. எனவே தான் இந்து கோவில் மீட்பு இயக்கத்தை தொடங்கி இருக்கிறோம்.

அறநிலையத்துறை இந்து கோவில்களை எவ்வளவு மோசமாக நிர்வாகம் செய்து வருகிறது என்பதற்கு மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்த இந்த சம்பவமே எடுத்துக் காட்டாகும்.

உலக மக்கள் அனைவரும் தரிசனம் செய்யும் புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் ஆலயத்தில் நடந்த இந்த சம்பவத்தை அரசியல்வாதிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை.

அவர்கள் எங்கு சென்றார்கள்? திருட்டுத்தனமாக அவர்களின் வீட்டில் உள்ளவர்கள் கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுவார்கள்.

தி.மு.க.வோ ஸ்டாலினோ எந்த ஒரு அரசியல் கட்சியினரோ இந்த சம்பவத்தை கண்டிக்கவில்லை. இது இந்து விரோத போக்காகும்.

மீனாட்சி அம்மன் கோவில் என்பது வழிபாட்டுத்தலம். அங்கு கடைகள் அமைக்கப்பட்டதே தவறு. கடந்த 2010-ம் ஆண்டு மத்திய அரசு சுற்றுலாத்துறையின் மூலம் 17 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது.

ஆனால் அந்த நிதி பயன்படுத்தாமல் மத்திய அரசுக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இன்னும் 24 மணி நேரத்தில் கோவில் வளாகத்தில் கடை வைத்திருப்போர் விவரம் வெளியிடப்பட வேண்டும். இதில் மூடி மறைக்க ஒன்றுமில்லை. வி‌ஷயம் சந்திக்கு வந்து விட்டது.

சுமார் 7 ஆயிரம் சதுரடி பரப்பு பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. கடந்த 1992-ம் ஆண்டில் இருந்தே கோவில் வளாகத்துக்குள் கடைகள் இருக்கக்கூடாது என்று இந்துமுன்னணி போராட்டம் நடத்தி வருகிறது.

இந்து சமய அறநிலையத்துறை என்பது லாயக்கற்ற நிர்வாகம் ஆகும். இந்து சமய அறநிலையத்துறையில் 628 அதிகாரிகள் கொள்ளையடிப்பதற்காகவே கோவிலை பயன்படுத்துகிறார்கள்.

தமிழகத்தில் டாஸ்மாக்கும், கோவில்களும் அரசியல்வாதிகள் கொள்ளையடிக்கும் இடமாக மாறிவிட்டது.

நெருப்பு இல்லாமல் புகையாது. இன்னும் புகைந்து கொண்டே இருக்கிறது. அதை அணைக்க வேண்டும்.

தமிழகத்தில் இந்துக்களுக்கும், இந்து கோவில்களுக்கும், இந்து உணர்வுக்கும் பாதுகாப்பு இல்லை.

மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் நிறுத்தப் பட்ட தீயணைப்பு வண்டி சம்பவம் நடந்த நாளன்று அங்கு இல்லை. அதனால் தான் சதி என்கிறோம்.

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் இடத்தை பார்வையிட்டு கூறும் போது, சிலைகளுக்கு பாதிப்பு இல்லை என்று கூறியுள்ளார்.

தூணில் இருந்த விக்ரகங்கள், சிலைகள் இல்லையா? புராதன சின்னங்கள் இல்லையா? கழகங்களின் ஆட்சியில் இந்து கோவில்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி விட்டது. எனவே தான் இவர்கள் ஆள தகுதியில்லாதவர்கள். இதனை நெற்றியில் விபூதி, குங்குமம் வைக்கும் ஒவ்வொரு இந்துவும் முடிவு செய்ய வேண்டிய கால கட்டம் வந்து விட்டது.

இந்த சம்பவத்துக்கு இணையாக ஒரு ஆன்மீக நிகழ்ச்சியை நாம் நடத்த வேண்டும். அனைத்து வீடுகளிலும் கோலமிட்டு, விளக்கேற்ற வேண்டும்.

ஒரே நேரத்தில் இந்துக்கள் இந்த வழிபாட்டை நடத்தி மீனாட்சி அம்மனுக்கு பெருமை சேர்க்க வேண்டும்.

மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட சம்பவம் சதியா? அல்லது விபத்தா? என்று தெரியவில்லை. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி உண்மையை கண்டுபிடிக்க வேண்டும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com