பா.ஜ.க.-காங். மாறி மாறி புகார்: குஜராத் மாநிலங்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தாமதம்

குஜராத் மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் உறுப்பினர்கள் வாக்குச்சீட்டை பா.ஜ.க. தலைவரிடம் காட்டியது தொடர்பாக பிரச்சினை எழுப்பியதால், வாக்கு எண்ணிக்கை தாமதம் ஆனது.
பா.ஜ.க.-காங். மாறி மாறி புகார்: குஜராத் மாநிலங்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தாமதம்
Published on

அகமதாபாத்:

குஜராத் மாநிலங்களவை தேர்தலில் பா.ஜனதா தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி, அண்மையில் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்த பல்வந்த்சிங் ராஜ்புத் ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தியின் அரசியல் செயலாளர் அகமது பட்டேலும் போட்டியிட்டனர். 3 இடங்களுக்கு 4 பேர் போட்டியிடுவதால், அகமது பட்டேலை தோற்கடிக்க பா.ஜ.க முயற்சி மேற்கொண்டது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று வாக்குப்பதிவு நடந்தது. வாக்குப்பதிவு நடைபெற்ற போது, காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் இருவர், தாங்கள் பதிவு செய்த வாக்குச்சீட்டை பா.ஜ. தலைவரிடம் காண்பித்துள்ளனர்.

இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்த காங்கிரஸ், கட்சி மாறி வாக்களித்த எங்களது கட்சி எம்.எல்.ஏ.க்கள் வாக்கை செல்லாது என அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியது. அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் விரும்புகிறது.

கடந்த ஆண்டு அரியானாவில் இதேபோன்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டபோது, வாக்கை செல்லாது என அறிவிக்கப்பட்டதுபோல், குஜராத்திலும் 2 எம்.எல்.ஏ.க்களின் வாக்கை செல்லாது என அறிவிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் சுட்டிக் காட்டினர். 

இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் குவிந்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், நிர்மலா சீதாராமன், பியூஸ் கோயல், உள்ளிட்டோர் காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும் தேர்தல் ஆணையத்தில் சென்று முறையிட்டனர்.

இதையடுத்து வாக்குப்பதிவின் முழுமையான வீடியோ காட்சிகளை ஆய்வு செய்ய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது. தேர்தல் ஆணையம் அனுமதி அளித்த பிறகே, வாக்குப்பதிவு துவங்கும் என்று குஜராத் மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com