

ஜெய்ப்பூர்:
5-வது புரோ கபடி லீக் திருவிழா 12 நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள அணியுடன் தலா 3 முறையும், அடுத்த பிரிவில் உள்ள 6 அணிகளுடன் ஒரு முறையும், ‘வைல்டு கார்டு’ ஆட்டம் ஒன்றிலும் மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பெறும் அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறும். ஜெய்ப்பூர் சுற்று ஆட்டங்கள் கடந்த 6-ம் தேதி தொடங்கியது.
இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ் அணி, புனேரி பால்டன் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் 38-30 என்ற புள்ளிக்கணக்கில் புனேரி பால்டன் அணி வெற்றி பெற்றது. புனே அணியின் ராஜேஷ் மொண்டால் அதிகபட்சமாக 9 தொடுபுள்ளிகள் எடுத்தார்.
முன்னதாக நடந்த மற்றொரு வைல்டு கார்டு லீக் போட்டியில் பாட்னா பைரேட்ஸ் - குஜராத் பார்ச்சூன் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 33-29 என்ற புள்ளிக்கணக்கில் குஜராத் பார்ச்சூன் ஜெயண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது.
இன்றைய ஆட்டங்களின் முடிவில் 'ஏ' பிரிவு புள்ளிப்பட்டியலில் குஜராத் பார்ச்சூன் ஜெயண்ட்ஸ் அணி 77 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், புனேரி பால்டன் அணி 63 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ் அணி 50 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன. 'பீ' பிரிவு புள்ளிப்பட்டியலில் பாட்னா பைரேட்ஸ் அணி 67 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் நீடிக்கிறது.
நாளை ஓய்வு தினம் எனவே போட்டிகள் நடைபெறாது. நாளை மறுநாள் நடைபெறும் லீக் போட்டிகளில் யூ மும்பா - தமிழ் தலைவாஸ், ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ் - தபாங் டெல்லி அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன.