

புதுடெல்லி:
பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவுக்கு ராணுவ கோர்ட் மரண தண்டனை விதித்தது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்தியா, அவரை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வந்தது. ஆனால், அவருக்கு தூதரக உதவிகள் தொடர்ந்து மறுக்கப்பட்டது.
இதையடுத்து, ஜாதவுக்கு விதித்த மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா மனு தாக்கல் செய்தது.
கடற்படை பணியில் இருந்து விருப்ப ஓய்வுபெற்று, ஈரான் நாட்டில் சொந்தமாக தொழில் நடத்திவந்த ஜாதவ் மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் ஜோடிக்கப்பட்டவை என்றும், கேலிக்கூத்தாக விசாரணை நடைபெற்றதாகவும் இந்தியா தரப்பில் வாதிடப்பட்டது. வியன்னா ஒப்பந்தம் மற்றும் சர்வதேச சட்டத்தை மீறி பாகிஸ்தான் செயல்பட்டிருப்பதால், ஜாதவை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் இந்தியா வேண்டுகோள் வைத்தது.
இதனை பரிசீலித்த சர்வதேச நீதிமன்றம், வழக்கு நடைபெற்று வருவதால் ஜாதவின் மரண தண்டனையை நிறுத்தி வைத்து கடந்த மே மாதம் 18-ம் தேதி உத்தரவிட்டது.
இதற்கிடையில், குல்பூஷன் ஜாதவின் மனைவி மற்றும் தாயார் அவரை சந்திக்க வேண்டும் என்பதற்காக எடுத்த தொடர் முயற்சிக்கு பாகிஸ்தான் அரசு இறுதியாக ஒப்புதல் அளித்தது. மனிதாபிமான அடிப்படையில் இதை அனுமதிப்பதாக பாகிஸ்தான் தெரிவித்தது. அவர்கள் இருவரும் பாகிஸ்தான் வருவதற்கு கடந்த 20-ந்தேதி விசா வழங்கப்பட்டது.
இதையடுத்து, இஸ்லாமாபாத் நகரில் இருக்கும் சிறைச்சாலையில் ஜாதவின் மனைவி சேத்தன்குல் மற்றும் தாயார் அவந்தி ஆகியோர் குல்பூஷன் ஜாதவை இன்று சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக இவர்கள் இருவரும் கடந்த 25-ம் தேதி இஸ்லாமாபாத் நகருக்கு வந்தனர்.
சுமார் 1.30 மணியளவில் ஜாதவின் மனைவி மற்றும் தாயார் குல்பூஷன் ஜாதவை சந்தித்து பேசியதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சந்திப்பு சுமார் 40 நிமிடம் நடைபெற்றதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டது. கண்ணாடி அறையின் உள்பக்கம் ஜாதவ் அமர்ந்திருக்க எதிர்புறம் அமர்ந்திருந்த அவரது தாயாரும் மனைவியும் உள் இணைப்பு தொலைபேசி (இண்டர்காம்) மூலமாக பேசினர்.
இந்நிலையில், இஸ்லாமாபாத்தில் இருந்து டெல்லி திரும்பிய ஜாதவின் மனைவி மற்றும் தாயார் நேற்று வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
அதன் பின்னர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று பிற்பகல் வெளியிட்ட செய்திக்குறிப்பின் மூலம் குல்பூஷன் ஜாதவை அவரது மனைவி மற்றும் தாயார் இஸ்லாமாபாத்தில் சந்தித்தபோது பாதுகாப்பு என்ற பெயரில் தாலி, வளையல்களை கழற்ற வைத்தும் நெற்றியில் இருந்த பொட்டை அழிக்கச் செய்தும் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்ததாக தெரிய வந்தது.
இந்நிலையில், இந்த பிரச்சனையை மையமாக வைத்து பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று கடும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, இரு அவைகளும் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக, ஜாதவ் குடும்பத்தாருக்கு பாகிஸ்தானில் இழைக்கப்பட்ட அவமரியாதை தொடர்பாக மக்களவையில் காங்கிரஸ், அ.தி.மு.க., தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர்.
ஒரு பெண்ணின் தாலியை கழற்றுமாறு பாகிஸ்தான் அதிகாரிகள் கூறியது இந்தியாவுக்கு இழைக்கப்பட்ட அவமரியாதை என்று அ.தி.மு.க. உறுப்பினரும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை குறிப்பிட்டார்.
காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, பாகிஸ்தான் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஜாதவை இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்து பேசிய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், இவ்விவகாரம் தொடர்பாக நாளை அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று உறுதி அளித்தார்.