

பாகூர்:
புதுவை கன்னியக்கோவில் பகுதியில் குடியிருப்பு மத்தியில் குப்பைகள் கொட்டி தேக்கி வைக்கப்படுவதால் நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும், மேலும் இதுபோன்று உச்சிமேடு ஏரிக்கரையில் குப்பைகள் கொட்டப்படுவதாகவும் கவர்னர் கிரண்பேடிக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்து இருந்தனர்.
இதையடுத்து அந்த இடங்களை ஆய்வு செய்வதற்காகவும், மேலும் பாகூர் பகுதியில் உள்ள இடங்களில் மழை சேதங்களை பார்வையிடவும் கவர்னர் கிரண்பேடி திட்டமிட்டார். அதற்காக இன்று காலை ராஜ்நிவாசில் இருந்து புறப்பட்டு வந்தார்.
முதலில் குப்பைகள் கொட்டப்பட்டு இருந்த இடத்தை பார்வையிட்ட கவர்னர் கிரண்பேடி அங்கிருந்த கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளிடம் இதுபோன்று பொதுமக்களை பாதிக்கக்கூடிய வகையில் குப்பைகளை தேக்கி வைக்க கூடாது என அறிவுறுத்தினார்.
மேலும் சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவ்வொரு கிராமங்களிலும் கருத்தரங்கு நடத்த வேண்டும் என்று கவர்னர் கிரண்பேடி கூறினார்.
அதோடு கிராமங்களில் மகளிர் சுய உதவிக்குழு மூலம் குப்பைகளை சேகரித்து அதனை உரமாக தயாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அதிகாரிகளிடமும், அங்கிருந்த பொதுமக்களிடமும் கேட்டு கொண்டார்.
இந்த நிலையில் பாகூர் பகுதியில் மழை சேதங்களை பார்வையிட கவர்னர் கிரண்பேடி வருவதாக தகவல் அறிந்த அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண் கள் பாகூர் மாதா கோவில் அருகே ஒன்று திரண்டு இருந்தனர்.
இலவச அரிசி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் கவர்னர் கிரண் பேடிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த அவர்கள் ஒன்று திரண்டு இருந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.
இதுபற்றி போலீஸ் அதிகாரிகள் கவர்னர் கிரண்பேடியின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். இதனால் கவர்னர் கிரண் பேடி பாகூர் பகுதிக்கு செல்லாமல் தனது ஆய்வு பயணத்தை பாதியிலேயே முடித்து கொண்டு ராஜ்நிவாஸ் திரும்பினார்.