புதுவை அரசின் கோப்புகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை - கவர்னர் கிரண்பேடி பட்டியல் வெளியிட்டார்

முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்களின் புகாருக்கு பதில் அளிக்கும் வகையில் கவர்னர் கிரண்பேடி அரசின் கோப்புகள் விவரத்தை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளார்.
புதுவை அரசின் கோப்புகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை - கவர்னர் கிரண்பேடி பட்டியல் வெளியிட்டார்
Published on

புதுச்சேரி:

புதுவை கவர்னர் கிரண்பேடிக்கும், முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது.

யூனியன் பிரதேசமான புதுவையில் தனக்கே அதிகாரம் என கூறி அரசின் அன்றாடப் பணிகளில் கவர்னர் கிரண்பேடி தலையிட்டு வருகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும் போது கவர்னருக்கு அதிகாரம் கிடையாது என அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மோதல் காரணமாக கவர்னர் கிரண்பேடி வேண்டுமென்றே திட்டமிட்டு அரசின் கோப்புகளுக்கு அனுமதி அளிக்காமல் உள்ளார் என அமைச்சர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். கவர்னர் மாளிகையில் எந்த கோப்புகளும் தேங்கியிருக்கவில்லை என கவர்னர் தொடர்ந்து கூறி வருகிறார்.

இந்த நிலையில் அரசிடம் இருந்து கடந்த 11-ந் தேதி முதல் 16-ந் தேதி வைரை வந்த 14 கோப்புகளின் விவரத்தையும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கவர்னர் கிரண்பேடி இணைய தளத்தில் பட்டியல் வெளியிட்டுள்ளார். ஜூன் மாத இலவச அரிசிக்கு ரூ.19 கோடியே 31 லட்சத்துக்கு ஒப்புதல், சுகாதார துறை மற்றும் கல்வி துறையில் காலி பணியிடங்களை நிரப்ப அனுமதி உள்ளிட்ட கோப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதோடு இனி வரும் காலங்களில் கோப்புகளில் கவர்னர் மாளிகைக்கு வருவது முதல் அதன் மீது அரசு எடுக்கும் நடவடிக்கைகள் வரை கவர்னர் மாளிகையின் இணைய தளத்தில் பதிவு செய்யப்படும் என்றும் கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார்.

வாரந்தோறும் புதன் மற்றும் சனிக்கிழமையில் கோப்பு தொடர்பான விவரங்கள் இணைய தளத்தில் பதிவேற்றப்படும். இதனை பொதுமக்கள் பார்க்கலாம். மேலும், கோப்பு தொடர்பான தகவல் அறிய விரும்புவோர் துறைகளை அணுகலாம் கவர்னர் மாளிகையையும் தொடர்பு கொள்ளலாம் என்றும் கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்களின் புகாருக்கு பதில் அளிக்கும் வகையில் கவர்னர் கிரண்பேடி அரசின் கோப்புகள் விவரத்தை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com