எடப்பாடி அரசுக்கு எதிராக வரிந்து கட்டும் எதிர்க்கட்சிகள்: கவர்னரிடம் புகார்

தி.மு.க. உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து எடப்பாடி அரசு மீது புகார் அளித்தனர்.
எடப்பாடி அரசுக்கு எதிராக வரிந்து கட்டும் எதிர்க்கட்சிகள்: கவர்னரிடம் புகார்
Published on

சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஒன்றாக கைகோர்த்த பின்னர், அ.தி.மு.க.வில் குழப்பம் அதிகரித்துள்ளது.

ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்-அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டதும், அவரது ஆதரவாளரான மா.பா.பாண்டியராஜனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டதும் தினகரன் ஆதரவாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனை தொடர்ந்து அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். புதுச்சேரியில் சொகுசு விடுதியில் அவர்கள் ஒன்றாக தங்கி இருக்கிறார்கள்.

கவர்னரை நேரில் சந்தித்தும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மனு அளித்தனர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும், எனவே அவருக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்கிறோம் என்றும் தெரிவித்தனர். இதனால் எடப்பாடி பழனிசாமி அரசு மெஜாரிட்டியை இழந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன.

இதனை தொடர்ந்து தி.மு.க. உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து எடப்பாடி அரசு மீது புகார் அளித்தனர்.

தி.மு.க.-காங்கிரஸ் கட்சியினர் குழுவாக சென்று கவர்னரிடம் அளித்த மனுவில் எடப்பாடி அரசு பெரும் பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று வலுயுறுத்தினர்.

இந்த நிலையில் இன்று திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், ஜவாஹிருல்லா உள்ளிட்ட தலைவர்களும் இன்று கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து முறையிட்டனர். ஆனால் அ.தி.மு.க. சண்டையில் தன்னால் தலையிட முடியாது என்று கூறி கவர்னர் கைவிரித்து விட்டார். எடப்பாடி பழனிசாமி அரசுக்கு இப்படி வரிந்து கட்டிக் கொண்டு எதிர்க்கட்சிகள் செயல்படுவது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விசயத்தில் கவர்னர் நடவடிக்கை எடுக்கா விட்டால் ஜனாதிபதியிடம் நேரில் சென்று முறையிடவும் தி.மு.க. திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே தினகரன் இன்று அளித்த பேட்டியில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் பதவி விலகினால் மட்டுமே பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என்று கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com