சி.எம்.டி.ஏ. விரிவாக்கம் குறித்து அரசு முடிவு எடுக்கவில்லை - ஐகோர்ட்டில் வக்கீல் தகவல்

சி.எம்.டி.ஏ. அதிகார எல்லையை விரிவாக்கம் செய்வது குறித்து இறுதி முடிவு எடுக்கவில்லை என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
சி.எம்.டி.ஏ. விரிவாக்கம் குறித்து அரசு முடிவு எடுக்கவில்லை - ஐகோர்ட்டில் வக்கீல் தகவல்
Published on

சென்னை:

அண்ணா பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் கே.பி.சுப்ரமணியன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (சி.எம்.டி.ஏ.) எல்லை, 1,189 சதுர கி.மீ. பரப்பளவாக இருந்தது. இந்த எல்லையை 8 ஆயிரத்து 878 சதுர கி.மீ. பரப்பளவாக விரிவாக்கம் செய்து தமிழக அரசு கடந்த ஜனவரி 22ந்தேதி அரசாணை வெளியிட்டது.

இதன்மூலம் சி.எம்.டி.ஏ.வின் நிர்வாகத்துக்குள் வரும் திட்டப்பகுதி சுமார் 7 மடங்காக அதிகரித்துள்ளது. இதற்கு ஏற்ப உள்கட்டமைப்பு, ஊழியர்கள் இல்லாததால், நகரமைப்புத் துறையின் விதிகளை தீவிரமாக செயல்படுத்த முடியாமல், சி.எம்.டி.ஏ.வின் நிர்வாகப்பணி முடங்கி போய் உள்ளது.

சி.எம்.டி.ஏ., அங்கீகாரம் பெறாமல், விதிமுறைகளை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டதால்தான், கடந்த 2015-ம் ஆண்டு சென்னை மாநகரமே வெள்ளத்தில் மிதந்தது. எனவே, தற்போது சி.எம்.டி.ஏ. எல்லையை விரிவாக்கம் செய்துள்ளதால், எந்த பயனும் இல்லை. சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த முடியாத நிலையில், சி.எம்.டி.ஏ. இருப்பதால், அந்த அமைப்பு உருவாக்கப்பட்டதன் நோக்கமே சிதைந்துள்ளது.

எல்லையை விரிவாக்கம் செய்வதற்கு முன்பு, புதிய பகுதியில் வசிக்கும் மக்களிடம் கருத்து கேட்கப்பட்டதே தவிர, ஏற்கனவே, சி.எம்.டி.ஏ. அதிகார எல்லைக்கும் வசிக்கும் மக்களின் கருத்தை கேட்கவில்லை. எனவே, இந்த அரசாணை சட்ட விரோதமானது என்று அறிவித்து, அதை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல்குத்தூஸ் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வக்கீல், சி.எம்.டி.ஏ. அதிகார எல்லையை விரிவுப்படுத்த இதுவரை அதிகாரப் பூர்வமாக அரசு முடிவு எடுக்கவில்லை என்று கூறினார்.

இதையடுத்து, இந்த மனுவுக்கு விரிவான பதில் அளிக்க தமிழக அரசுக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com