ஹஜ் பயணத்துக்கான விமான கட்டணங்கள் 35 சதவீதம் குறைப்பு - மத்திய அரசு அறிவிப்பு

ஹஜ் யாத்திரைக்காக சவுதி அரேபியா நாட்டுக்கு செல்லும் இந்தியர்களுக்கான விமான கட்டணங்களை வெகுவாக குறைத்து மத்திய அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. #Haj
ஹஜ் பயணத்துக்கான விமான கட்டணங்கள் 35 சதவீதம் குறைப்பு - மத்திய அரசு அறிவிப்பு
Published on

முஹம்மது நபியின் பிறப்பிடமான மக்கா நகரம் மற்றும் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள மதினா ஆகிய இடங்களுக்கு இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமிய மக்கள் புனித ‘ஹஜ் பயணம்’ மேற்கொண்டு வருகின்றனர்.

பத்து லட்சம் பேர் மக்கள் தொகையின் அடிப்படையில் ஆயிரம் பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள சவுதி அரசாங்கம் முன்னர் அனுமதி அளித்து வந்தது. ஒரு கோடி மக்கள் தொகை உள்ள நாட்டில் இருந்து 10 ஆயிரம் பேர் ஆண்டிற்கு ஒரு முறை ஹஜ் பயணம் செய்ய முடியும். இதன் அடிப்படையில், இந்தியாவில் இருந்து கடந்த (2017) ஆண்டு ஹஜ் பயணம் செல்லும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 25 ஆக உயர்ந்தது.

ஹஜ் யாத்திரை மேற்கொள்பவர்களுக்கு மத்திய அரசின் சார்பில் ஒருநபருக்கு சுமார் 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய்வரை மானியமாக அளிக்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டில் சுமார் ஒரு லட்சத்து 75 ஆயிரம் பேர் ஹஜ் யாத்திரைக்கு செல்லவுள்ள நிலையில் இதற்காக சுமார் 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

இதற்கிடையில், இந்தியாவில் இருந்து சவுதி அரேபியா நாட்டுக்கு ஹஜ் யாத்திரை செல்பவர்களுக்கு மத்திய அரசின் சார்பில் அளிக்கப்படும் மானியத் தொகை இந்த ஆண்டில் இருந்து ரத்து செய்யப்படுவதாக கடந்த 16-1-2018 அன்று அறிவிப்பு வெளியானது.

இதுதொடர்பாக, புதுடெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி, வரும் 2022-ம் ஆண்டுக்குள் ஹஜ் மானியத்தை படிப்படியாக குறைத்து நிறுத்த வேண்டும் என்று கடந்த 2012-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கிணங்க, சிறுபான்மையினர் விவகாரங்கள் துறையின் அதிகாரம்பெற்ற குழு அளித்த பரிந்துரையை ஏற்று இந்த ஆண்டில் இருந்து ஹஜ் மானியம் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தார்.


கண்ணியமான முறையில் சிறுபான்மையினத்தவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் மத்திய அரசின் கொள்கை முடிவு இது என்றும் குறிப்பிட்ட அவர், ஹஜ் மானியத்துக்காக செலவழிக்கப்படும் தொகை இனி சிறுபான்மையினத்தவர்களின் பெண் குழந்தைகளின் கல்விக்காக பயன்படுத்தப்படும் என கூறினார்.

இந்நிலையில், ஹஜ் யாத்திரைக்காக சவுதி அரேபியா நாட்டுக்கு செல்லும் இந்தியர்களுக்கான விமான கட்டணங்களை வெகுவாக குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி இன்று தெரிவித்துள்ளார்.

முன்னர், காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு கடந்த 2013-14-ம் நிதியாண்டில் மும்பை, அல்லது அகமதாபாத் நகரில் இருந்து ஜெட்டா அல்லது மதினா செல்லும் ஹஜ் பயணிகளுக்கான கட்டணத்தை 98,750 ரூபாயாக நிர்ணயித்து இருந்தது.

தற்போது அகமதாபாத் நகரில் இருந்து செல்லும் கட்டணத்தை 65,015 ரூபாயாக குறைத்தும், மும்பையில் இருந்து செல்லும் கட்டணத்தை 57,857 ரூபாயாக குறைத்தும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, இதர நகரங்களில் இருந்து செல்லும் ஹஜ் யாத்ரீகர்களுக்கான விமான கட்டணங்களிலும் சுமார் 35 முதல் 40 சதவீதம் வரை குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்விவகாரத்தில் பிரதமர் அலுவலகம் அதிக அக்கறை எடுத்து கொண்டது. சமரசம் கொள்ளும் போக்குக்கு பதிலாக அதிகாரமளித்தல் என்னும் அடிப்படையில் மத்திய அரசு இந்த புதிய முடிவை எடுத்துள்ளது என்றும் முக்தார் அப்பாஸ் நக்வி குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com