

சென்னை:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தவறிய மத்திய அரசை கண்டித்து சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே ஜி.கே.வாசன் தலைமையில் த.மா.கா.கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
காவிரி விவசாயிகள் பிரச்சினையில் மத்திய அரசு மிகப்பெரிய துரோகத்தை செய்துள்ளது. விவசாயிகள் பிரச்சினை, சிறுபான்மையினர் நலன் ஆகியவற்றை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.
காவிரியில் தமிழர்களின் உரிமையை எக்காரணம் கொண்டும் விட்டுக் கொடுக்க முடியாது. இது விவசாயிகளின் பயிர் பிரச்சினை மட்டுமல்ல. தமிழர்களின் உயிர் பிரச்சினை
தமிழக மக்களின் உரிமைகளை மீட்டெடுப்பதில் த.மா.கா. என்றும் உறுதியாக இருக்கும். எந்த கட்சியின் ஆதரவையும் நாடாமல் போராட்ட களத்தில் நின்று போராடுகிறோம்.
வருகிற 4-ந்தேதி டெல்டா மாவட்டத்தில் கையெழுத்து இயக்கத்தையும் 6-ந்தேதி திருச்சியில் உண்ணா விரதத்தையும் நடத்துகிறோம்.
தமிழர்களின் உரிமைகள் பறிபோவது பற்றியும், தமிழர்களின் நலன்கள் புறக்கணிக்கப்படுவது பற்றியும் பிரதமர் மோடி அலுவலகத்துக்கு இளைஞர்களும், மாணவர்களும் கோடிக்கணக்கில் இ-மெயில்களை அனுப்பி சுட்டிக் காட்ட வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை எங்கள் போராட்டம் தொடரும். விவசாயிகள், வியாபாரிகள் போராட்டத்துக்கு எங்கள் ஆதரவு உண்டு.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டம் முடிந்ததும் இளைஞரணி தலைவர் யுவராஜா மற்றும் ஏராளமான தொண்டர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். உடனே வாசன் வந்து பொதுமக்களுக்கு இடையூறு செய்யக்கூடாது என கூறி கலைந்து போக செய்தார். யாரும் மறியலில் ஈடுபட கூடாது என்றார்.
இதில் ஞானதேசிகன், கோவை தங்கம், ஞானசேகரன், விடியல் சேகர், ஆர்.எஸ்.முத்து, சக்தி வடிவேல், தலைமைநிலைய செயலாளர்கள் டி.எம்.பிரபாகர், ஜி.ஆர்.வெங்கடேஷ், டி.என்.அசோகன், சீனிவாசன், அனுராதா அபி, மாவட்டத் தலைவர்கள் கொட்டிவாக்கம் முருகன், பிஜூ.சாக்கோ, சைதை மனோகரன் அருண்குமார், தாம்பரம் மணி, கோவை வாசன், மற்றும் நிர்வாகிகள் அமீனா பக்கர், கக்கன், பட்டுகோட்டை பூபதி, பி.ஜவகர் பாபு, ஆர்.புனிதன், பத்மநாபன், வடசென்னை தீபா, வி.என்.அரவணன், முனவர் பாட்ஷா, கே.ஆர்.டி. ரமேஷ், சைதை நாகராஜன், கோயில் பாஸ்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர். #tamilnews