சிறுமிக்கு பாலியல் தொல்லை: பள்ளி நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் மறியல்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் எதிரொலியாக பள்ளி நிர்வாகத்தை கண் டித்து கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
சிறுமிக்கு பாலியல் தொல்லை: பள்ளி நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் மறியல்
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகே உள்ள மேற்கு மீனாட்சி நாயக்கன் பட்டியைச் சேர்ந்த 3 வயது சிறுமி ஒருவர் அங்குள்ள அங்கன் வாடி மையத்தில் படித்து வருகிறாள். நேற்று மாலை வீட்டுக்கு வந்து விளையாடிக் கொண்டு இருந்தாள். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து (78) என்பவர் சிறுமிக்கு மிட்டாய் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி அவரை தனியாக அழைத்துச் சென்றார்.

பின்னர் அவரை பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் அழுது கொண்டே வீட்டுக்கு வந்த சிறுமி நடந்த விபரங்களை தன் பெற்றோரிடம் கூறினாள். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் முதியவரை தர்ம அடி கொடுத்து தாடிக்கொம்பு போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் சிறுமியை அரசு ஆஸ்பத்திரிக்கு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இன்று அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பள்ளி முன்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பள்ளியுடன் இணைந்து செயல்படும் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. பள்ளியில் காம்பவுண்டு சுவர் இல்லாததால் பல நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடக்கிறது. இது குறித்து அதிகாரிகளுக்கு ஏற்கனவே கோரிக்கை அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே பள்ளிக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். சிறுமியை பலாத்காரம் செய்த முதியவருக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும் என கூறி பழனி பைபாஸ் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு நகர் மேற்கு மற்றும் தாடிக்கொம்பு போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாக உறுதி அளித்ததின் பேரில் அவர்கள் மறியலை கைவிட்டனர். இந்த சம்பவத்தால் திண்டுக்கல் - பழனி சாலையில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com