

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் வருகிற ஜூலை மாதம் 24-ந்தேதியுடன் முடிவடைகிறது.
புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க ஜூலை 17-ந் தேதி தேர்தல் நடக்கிறது. பா.ஜனதா வேட்பாளரை தேர்ந்தெடுக்க அக்கட்சி சார்பில் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த குழுவில் மத்திய மந்திரிகள் அருண்ஜெட்லி, ராஜ்நாத் சிங், வெங்கையா நாயுடு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். வேட்பாளரை தேர்வு செய்யும் முன் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சந்தித்துப் பேசி ஒருமித்த ஆதரவை திரட்ட முடிவு செய்தனர்.
அதன்படி இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது வீட்டுக்கு சென்று மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், வெங்கையா நாயுடு ஆகியோர் சந்தித்து பேசினார்கள். 30 நிமிடம் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது மூத்த தலைவர்கள் குலாம்நபி ஆசாத், மல்லிகார்ஜூன கார்கே உடன் இருந்தனர்.
இந்த சந்திப்பிற்கு பின்னர் மல்லிகார்ஜுன கார்கேயிடம் கேட்டபோது, சோனியாவை மத்திய மந்திரிகள் சந்தித்தபோது ஜனாதிபதி வேட்பாளர் பெயர் எதையும் கொடுக்கவில்லை. இதில் ஒருமித்த கருத்து என்ற கேள்வியே எழவில்லை.
சோனியாவை சந்தித்து ஒத்துழைப்பு கேட்கவே வந்தார்கள். அவர்கள் வேட்பாளரை முடிவு செய்த பின் நாங்கள் ஆலோசனை நடத்துவோம் என்றார்.
குலாம்நபி ஆசாத் கூறுகையில், “சோனியாவை சந்தித்த மத்திய மந்திரிகள் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக யார் பெயரையும் முன்நிறுத்தி வரவில்லை” என்றார்.
பா.ஜனதா சார்பில் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக திரவுபதி முர்மு நிறுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது. இவர் ஒடிசா மாநிலத்தின் தலித் வகுப்பைச் சேர்ந்தவர். தற்போது ஜார்க்கண்ட் மாநில கவர்னராக இருக்கிறார்.
திரவுபதி முர்மு ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர். அவரை வேட்பாளராக நிறுத்தினால் ஆதரவு அளிக்க மாட்டோம் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே ஜனாதிபதி தேர்தலில் மெட்ரோ ஸ்ரீதரன் என்று அழைக்கப்படும் முன்னாள் டெல்லி மெட்ரோ ரெயில் தலைவர் ஸ்ரீதரன் பெயரை பா.ஜனதா பரிசீலித்து வருகிறது.
இவர் எந்த அரசியல் கட்சியையும் சேராதவர். எனவே அவரை வேட்பாளராக நிறுத்தினால் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் ஆதரவை பெறலாம் என்று பா.ஜனதாவில் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் திட்ட அதிகாரியான ஸ்ரீதரன் தலைசிறந்த என்ஜினீயர் ஆவார். கேரளமாநிலம், பாலக்காடை சேர்ந்தவர்.
85 வயதாகும் இவர் கொங்கன்ரெயில்வே, டெல்லி மெட்ரோ ரெயில் உள்ளிட்ட பல்வேறு சவாலான ரெயில் திட்டங்களை நிறைவேற்ற திட்டம் வகுத்து கொடுத்தவர் இதற்காக பத்மவிபூஷண், பத்மஸ்ரீ விருதுகள் பெற்றுள்ளார்.
பா.ஜனதாவுடனான ஆலோசனையில் தோல்வி ஏற்பட்டால் எதிர்க்கட்சிகள் சார்பில் காந்தியின் பேரனும், முன்னாள் மேற்கு வங்காள கவர்னருமான ராஜ்மோகன் காந்தியை நிறுத்தப்படுவார் என்று தெரிகிறது.
ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இடையே ஒருமித்த கருத்து ஏற்படாவிட்டால் ஜனாதிபதி தேர்தலில் போட்டி நடப்பது உறுதியாகி விடும்.