பொது வேலை நிறுத்தம்: கேரளா செல்லும் பஸ்கள் நிறுத்தம்

பொது வேலைநிறுத்தத்தால் கோவை உக்கடத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்படவில்லை.
பொது வேலைநிறுத்தத்தால் கோவை உக்கடத்தில் இருந்து கேரளாவுக்கு பஸ்கள் செல்லததால் பஸ்நிலையம் வெறிச்சோடி கிடந்தது
பொது வேலைநிறுத்தத்தால் கோவை உக்கடத்தில் இருந்து கேரளாவுக்கு பஸ்கள் செல்லததால் பஸ்நிலையம் வெறிச்சோடி கிடந்தது
Published on

கோவை:

மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கை உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை முன் வைத்தும், மத்திய அரசை கண்டித்தும் இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தம் 10 மத்திய தொழிற் சங்கத்தினரால் நடத்தப்பட்டது.

இந்த வேலை நிறுத்தம் கேரளாவில் முழு அடைப்பு போராட்டமாக மாறியது இதையொட்டி கேரளாவில் தனியார் மற்றும் அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. ஆனால் கோழிக்கோடு, கொச்சி, கோட்டயம், திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து சபரிமலைக்கு வழக்கம் போல் அரசு பஸ்கள் இயக்கப்பட்டது.

கோவை மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலத்தின் திருச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு, திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் கேரள மற்றும் தமிழக அரசு போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது.

பொள்ளாச்சி வழியாக கேரளா செல்லும் அரசு பஸ்களும் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.

சரக்கு லாரிகள் தமிழக-கேரள எல்லையான வாளையார் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.இன்று மாலை 6 மணிக்கு பின்னரே போக்குவரத்து தொடங்கும். கேரளாவில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது.

தொழிற்சங்கங்கள் சார்பில் கோவை, வால்பாறை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் இன்று மறியல் போராட்டம் நடைபெற்றது.

கோவையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு கோவை மாவட்ட ஆட்டோ ஓட்டுனர் சங்கம் ஆதரவு தெரிவித்து இருந்தது.

இதனால் ஆட்டோ டிரைவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மாணவ- மாணவிகள் நலன் கருதி பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு மட்டும் ஆட்டோக்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டது.

தொழிற் சங்கங்களை சேர்ந்த ஆட்டோக்கள் ஓடவில்லை. அவைகள் ஸ்டாண்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தினர் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

எனவே வங்கிகள் திறந்து இருந்தாலும் பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.

திருப்பூரில் ஏ.ஐ.டி.யூ.சி., தி.மு.க. உள்ளிட்ட தொழிற் சங்கத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் 50 சதவீத ஆட்டோக்கள் ஓடவில்லை. திருப்பூரில் தொழிற் சங்கத்தினர் பல்வேறு இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டத்திலும் ஆட்டோ டிரைவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசை கண்டித்து நடைபெறும் வேலை நிறுத்தத்திற்கு குன்னூர் அரவங்காடு வெடி மருந்து தொழிற்சாலை சி.எப்.எல்.யூ.,ஐ.என்.டி.யூ.சி., ஏ.ஐ.டி.இ.எப்., என்.இ.யூ., ஐ.என்.டி.டபிள்யூ.எப். தொழிற்சங்கத்தினர் ஆதரவு தெரிவித்து இருந்தனர்.

அவர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிற் சங்க கூட்டு குழு தலைவர் அசோகன், செயலாளர் திலிபன் ஆகியோர் தலைமையில் தொழிற் சங்க ஊழியர்கள் வெடி மருந்து தொழிற்சாலை வாயில் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com