பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுக்கும் - தலைமை ராணுவ தளபதி ஆவேசம்

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலை பாகிஸ்தான் நிறுத்தாவிட்டால் இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுக்கும் என்று தலைமை ராணுவ தளபதி ஆவேசத்துடன் கூறியுள்ளார்.
இந்திய ராணுவ தலைமை தளபதி மனோஜ் முகுந்த் நரவனே
இந்திய ராணுவ தலைமை தளபதி மனோஜ் முகுந்த் நரவனே
Published on

காஷ்மீர் யூனியன் பிரதேசம் குப்வாரா எல்லைப்புற மாவட்டம் ஹந்த்வாரா என்ற இடத்தில் ஒரு வீட்டுக்குள் புகுந்த பயங்கரவாதிகள், அங்கு வசிக்கும் குடும்பத்தினரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து ராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ் படை, காஷ்மீர் போலீசின் சிறப்பு நடவடிக்கை குழு ஆகியவை விரைந்து சென்று அந்த வீட்டுக்குள் நுழைந்து பிணைக் கைதிகளை பத்திரமாக மீட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான துப்பாக்கி சண்டையில் 2 ராணுவ அதிகாரிகள் உள்பட 5 பேர் பலியானார்கள். இதில் 2 பயங்கரவாதிகளும் உயிரிழந்தனர்.
இந்தநிலையில், இந்த சம்பவம் குறித்து இந்திய ராணுவ தலைமை தளபதி மனோஜ் முகுந்த் நரவனே நேற்று பேட்டி ஒன்றில் கூறியதாவது:-

பாகிஸ்தானின் அனைத்து அத்துமீறல்களுக்கும், பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதற்கும் இந்திய ராணுவம் உரிய பதிலடி தரும். காஷ்மீரில் பயங்கரவாத செயல்களுக்காக ஒருசிலரை, இந்த நிலையிலும் பாகிஸ்தான் அனுப்பி வருகிறது. அவர்கள் இதுபோன்ற நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளாவிட்டால், இந்தியா மிகவும் தீவிரமான வகையில் பதிலடி கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்படும். காஷ்மீர் பகுதியில் அமைதியை நிலைநாட்டும் பொறுப்பு பாகிஸ்தானுக்கு உரியது.

தங்கள் நாட்டில் மக்களை வாட்டி வதைத்து வரும் கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான போரை பாகிஸ்தான் தொடுக்காமல், பயங்கரவாதிகளை இந்திய எல்லைக்குள் அனுப்பி பயங்கரவாத செயலை ஊக்குவிப்பது அவர்கள் தங்கள் நாட்டு மக்கள் மீது வைத்துள்ள அக்கறையின்மையையே காட்டுகிறது. இதுபோன்ற நேரத்தில் இப்படி அடுத்த நாட்டுக்குள் பயங்கரவாத செயலை ஊக்குவிப்பது பாகிஸ்தானின் மனநிலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com