

தூத்துக்குடி:
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடி மாநகர பொதுமக்களுக்கு 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வந்து கொண் டிருந்தது. இது படிப்படியாக 5 நாட்கள், 7 நாட்கள் என்று அதிகரித்து இன்று 13 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வந்து கொண்டிருக்கிறது. இதற்கு நிர்வாக சீர்கேடு தான் காரணம். பாபநாசம் அணையில் கோடைகாலத்தில் 30 அடி தண்ணீர் இருந்த போது வராத குடிநீர் பஞ்சம் இப்போது அணையில் 62 அடி தண்ணீர் இருக்கும் போது வந்துள்ளது. அதிகாரிகளின் மெத்தனப்போக்கால் வல்லநாட்டில் குடிநீர் ஏற்றும் பம்புகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளை முறையாக பராமரிக்காமலும் இருப்பது இந்த குடிநீர் தட்டுப்பாட்டுக்கு ஒரு காரணமாகும்.
தூத்துக்குடி மாநகரத்தில் 13 நாட்களுக்கு ஒருமுறை வழங்கும் தண்ணீரை உடனடியாக குறைத்திடவும், தண்ணீர் வரும் நேரத்தை முறைப்படி அந்தந்த வார்டுகளுக்கு தெரியப்படுத்தி குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தவும் அறிவுறுத்த வேண்டும். தண்ணீர் பிரச்சினையை தீர்க்காமல் மாதத்தில் 3 நாட்களுக்கு மட்டுமே வரும் குடிநீருக்கு கட்டணத்தை மட்டும் பலமடங்கு உயர்த்தி உள்ளார்கள். அதுபோல சொத்துவரி, தொழில்வரி, குப்பைவரி என அனைத்தையும் பல மடங்கு உயர்த்தியுள்ளார்கள்.
மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் இனியும் காலதாமதிக்காமல் பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் பிரச்சினையை உடனடியாக தீர்க்க முன்வர வேண்டும். இல்லை என்றால் தூத்துக்குடி மாநகர தி.மு.க. சார்பில் பொதுமக்களை திரட்டி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.