

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
அ.தி.மு.க., தி.மு.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. பா.ஜனதா வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படவில்லை. அ.தி.மு.க.வில் ஏற்கனவே போட்டியிட்ட மதுசூதனன், தி.மு.க. சார்பில் மருது கணேஷ், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.
பா.ஜனதா சார்பில் கடந்த தேர்தலில் போட்டியிட்ட கங்கை அமரன் மீண்டும் போட்டியிடுவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் அவர் போட்டியிடவில்லை. அவருக்கு பதிலாக கரு.நாகராஜன் பா.ஜனதா வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஆர்.கே. நகரில் மீண்டும் போட்டியிடாதது ஏன்? என்பது குறித்து கங்கை அமரன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
சமீபத்தில் எனக்கு திடீர் என்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றேன். இப்போது உடல் நிலை தேறி வருகிறது. உடல் நலகுறைவு காரணமாகவே இந்த முறை ஆர்.கே.நகரில் போட்டியிடவில்லை.
பா.ஜனதா சார்பில் கரு.நாகராஜன் போட்டியிடுகிறார். அவர் துடிப்பானவர். ஆர்.கே.நகர் மக்கள் அவருக்கு வாக்களித்து பா.ஜனதாவை வெற்றி பெற செய்ய வேண்டும். பா.ஜனதா அங்கு வெற்றி பெற்றால் அது தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும். ஆர்.கே.நகர் தொகுதி மத்திய அரசு ஆதரவுடன் வளர்ச்சி பெறும்.
இவ்வாறு கங்கை அமரன் கூறினார்.