

திருமலை:
திருமலையில் உள்ள அன்னமயபவனில் திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு கலந்து கொண்டு பேசினார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் அதிக நேரம் தங்க வைக்கப்படுகின்றனர். எனவே வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் இலவச தரிசன பக்தர்களை அதிக நேரம் தங்க வைக்கப்படாமல் இருக்க, நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன அட்டை விரைவில் வழங்கப்பட உள்ளது.
நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன அட்டையை பக்தர்களுக்கு வழங்க, அடுத்த மாதம் (டிசம்பர்) 2-வது வாரத்தில் இருந்து பரிசோதனை நடைமுறை அமலுக்கு வருகிறது. பிப்ரவரி மாதத்திலிருந்து பக்தர்களுக்கு நிரந்தரமாக, நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன அட்டை வழங்கப்பட உள்ளது.
நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன அட்டையை வழங்க 21 இடங்களில் மொத்தம் 150 கவுண்ட்டர்கள் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. அந்தக் கவுண்ட்டர்களை தேவஸ்தான என்ஜினீயரிங், தகவல் தொழில் நுட்பம், மின்சாதனம், அன்னதானத்திட்டம் ஆகிய துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் தங்களுக்கு தகுந்தாற்போல் அமைத்துக்கொள்ள வேண்டும்.
அதில் கம்ப்யூட்டர்கள், விரல்ரேகை பதிவு கருவிகள் போன்றவற்றை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.
மேலும் கோவிலில் உள்ள வகுளமாதாதேவி சன்னதி, போட்டு (லட்டு) அறை, படி போட்டு, கூடுதல் போட்டு, லட்டு கம்ப்ளக்ஸ் போன்ற இடங்களை சீரமைத்து, பிப்ரவரி மாதத்துக்குள் பணியை முடிக்க வேண்டும். தங்கும் விடுதிகளில் பக்தர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படக்கூடாது. திருமலையில் பக்தர்களுக்கு விரைவில் கால் சென்டர்கள் அமைக்கப்பட உள்ளது.
அடுத்த மாதம் (டிசம்பர்) இறுதியில் வைகுண்ட ஏகாதசி, துவாதசி விழாக்கள் நடக்கின்றன. அதற்காக பக்தர்களுக்கு முன்கூட்டியே தரிசன வரிசைகள், கொட்டகைகள், குடிநீர் வசதிகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.
வைகுண்ட ஏகாதசி அன்று ஒரு லட்சம் பக்தர்கள் கியூ வரிசையில் காத்திருப்பார்கள். அவர்களுக்கு அன்னதானம், குடிநீர் ஆகியவற்றை தட்டுப்பாடு இல்லாமல் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.