

விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களின் உணவுக் கட்டணம் தொடர்பான தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-
தமிழ்நாடு அரசு, 2017-18ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதிகளில் தங்கி கல்வி பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியருக்கான உணவுக் கட்டணம் உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது.
அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலப் பள்ளி விடுதி மாணவ, மாணவியருக்கான உணவுக் கட்டணத்தை நபர் ஒருவருக்கு மாதமொன்றுக்கு ரூ.755/-லிருந்து ரூ.900/-ஆகவும், கல்லூரி விடுதி மாணவ, மாணவியருக்கான உணவுக் கட்டணத்தை நபர் ஒருவருக்கு மாதமொன்றுக்கு ரூ.875/-லிருந்து ரூ.1000/-ஆகவும் உயர்த்தி வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டார்.
இந்த உயர்த்தப்பட்ட உணவுக் கட்டணம், 2017-2018ஆம் கல்வியாண்டு ஜூன் 2017 முதல் மாணவ, மாணவியருக்கு வழங்கிட முதலமைச்சர் அனுமதி வழங்கியதோடு, அதற்கான கூடுதல் செலவினத் தொகையான 12 கோடியே 18 லட்சத்து 80 ஆயிரத்து 750 ரூபாய்க்கு நிதி ஒதுக்கீடு செய்தும் ஆணையிட்டார். அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்மூலம், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் 1338 பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் தங்கி கல்வி பயிலும் 86,807 மாணவ, மாணவியர்கள் பயனடைவார்கள்.