தனியார் பள்ளியில் வி‌ஷம் குடித்த 5 மாணவிகளிடம் கோட்டாட்சியர் விசாரணை

திருமங்கலம் தனியார் பள்ளியில் வி‌ஷம் குடித்த 5 மாணவிகளிடம் கோட்டாட்சியர் சுகன்யா, வட்டாட்சியர் நாகரத்தினம் ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர்.
தனியார் பள்ளியில் வி‌ஷம் குடித்த 5 மாணவிகளிடம் கோட்டாட்சியர் விசாரணை
Published on

பேரையூர்:

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் 5 மாணவிகள், ஆசிரியர் திட்டியதால் வகுப்பறையிலேயே குளிர்பானத்தில் எலி மருந்து கலந்து குடித்தனர். சிறிது நேரத்தில் 5 பேரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளி நிர்வாகம் மாணவிகளை மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்காமல் காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது. மேலும் அந்த மாணவிகளின் பெற்றோர்களை பள்ளிக்கு வரவழைத்து அவர்களிடம் சில உறுதிமொழிகளை எழுதி வாங்கிய பின்னர் மாணவிகளை ஆஸ்பத்திரியில் சேர்க்க அனுமதித்துள்ளது.

பின்னர் 3 மணி நேரத்திற்கு பின் 5 மாணவிகளும் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது டாக்டர் பெற்றோர்களிடம், வி‌ஷம் குடித்தவுடன் கொண்டு வராமல், ஏன் காலதாமதமாக வந்தீர்கள் என கண்டித்துள்ளார். தொடர்ந்து 5 மாணவிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதற்குள் இந்த தகவல் அந்த பகுதியில் காட்டுத்தீ போல பரவியது. மாணவிகள் தற்கொலைக்கு முயன்றது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் மாணவிகளிடம் கோட்டாட்சியர் சுகன்யா, வட்டாட்சியர் நாகரத்தினம் ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர். மாணவிகள் கூறிய வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com