சாமியாருக்கு சிறை: அரியானாவில் கலவரம் - 5 பேர் பலி, 200 பேர் காயம்
தேரா சச்சா சவுதா என்ற ஆன்மிக அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங். இவர் இரண்டு பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக அவர் மீது 2002-ம் ஆண்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்பேரில் அவர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது.
அரியானா மாநிலம் பஞ்ச்குலா பகுதியில் உள்ள சி.பி.ஐ. நீதிமன்றத்தில் சுமார் 14 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.
தீர்ப்பு வெளியானதும் பஞ்ச்குலா நீதிமன்றம் பகுதியில் திரண்டிருந்த குர்மீத் ராம் ரஹிம் சிங்கின் ஆதரவாளர்கள் வன்முறயில் குதித்தனர். அங்கு திரண்டிருந்த ஊடகவியலாளர்கள் மற்றும் நிருபர்கள் மீது தாக்குதல் நடத்தினர். ஏராளமான வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதேபோல் மாநிலத்தின் பல பகுதிகளில் வன்முறை வெறியாட்டம் அதிகரித்துள்ளது.
சிர்சா நகரில் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைமை அலுவலகம் அருகே மிக மோசமான அளவில் வன்முறை வெடித்தது. வன்முறையாளர்கள் மீது தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போலீசார் தாக்குதல் நடத்தி வருகின்றனர். போலீசார் மீதும் வன்முறையாளர்கள் தாக்குதல் நடத்தினர்.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மலவுட் மற்றும் பல்லுஅன்னா ரெயில் நிலையங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன. ஒரு பெட்ரோல் பங்க் தீக்கிரையானது. இன்று மாலை 5 மணி நிலவரப்படி அரியானாவில் நடந்த கலவரங்களில் பத்துக்கும் அதிகமானவர்கள் பலியானதாகவும், சுமார் 200 பேர் காயமடைந்ததாகவும் சண்டிகரில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் வெடித்துள்ள வன்முறை தொடர்பாக பஞ்சாப் மற்றும் அரியானா மாநில முதல் மந்திரிகளை தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் அங்குள்ள நிலவரங்களை கேட்டறிந்தார்.

