மாட்டு இறைச்சி வழக்கில் வியாபாரியை கொன்ற 11 பேரும் குற்றவாளிகள்- ஜார்கண்ட் கோர்ட்டு தீர்ப்பு

மாட்டிறைச்சி வழக்கில் வியாபாரியை கொன்ற 11 பேரும் குற்றவாளிகள் என ஜார்கண்ட் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மாட்டு இறைச்சி வழக்கில் வியாபாரியை கொன்ற 11 பேரும் குற்றவாளிகள்- ஜார்கண்ட் கோர்ட்டு தீர்ப்பு
Published on

ராஞ்சி:

ஜார்கண்ட் மாநிலம் ராம்கர் பகுதியை சேர்ந்தவர் அலிமுதீன் என்கிற அஸ்கர் அன்சாரி (42). இவர் தனது மாருதி வேனில் மாட்டிறைச்சி எடுத்து சென்றதாக கூறி ஒரு கும்பல் இவரை சுற்றி வளைத்து தாக்கியது.

பின்னர் அவரது வேனும் தீ வைத்து எரிக்கப்பட்டது. தாக்கியதில் படுகாயம் அடைந்த அவரை ராஞ்சியில் உள்ள ராகவேந்திரா அறிவியல் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் கடந்த (2017) ஆண்டு ஜூன் 29-ந் தேதி நடந்தது. கும்பல் அடித்து கொன்ற சம்பவமும், வேன் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவமும் அடங்கிய வீடியோ சமூக வலை தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்த வழக்கு ராம்கர் அதி விரைவு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நீதிபதி ஓம் பிரகாஷ், “முஸ்லிம் வியாபாரியை அடித்து கொன்ற 11 பேரும் குற்றவாளிகள்” என்று தீர்ப்பளித்தார்.

தண்டனை பெற்றவர்களில் ராம்கர் பா.ஜனதா தலைவர் நித்தியானந்தா மாக்தோ மற்றும் அகில இந்திய பா.ஜனதா மாணவர் அணியை சேர்ந்த கபில்தாகூர் முக்கியமானவர்கள் ஆவர். இவர்கள் தவிர தீபக் மிஸ்ரா, சந்தோஷ் சிங், கோட்டு வர்மா, ஆகியோரும் அடங்குவர். ஏற்கனவே கோர்ட்டு ரானா என்பவர் சிறுவர் சீர்திருத்த சிறைக்கு மாற்றப்பட்டார்.

இவர்களுக்கான தண்டனை விவரம் வருகிற 20-ந்தேதி அறிவிக்கப்பட உள்ளது. இதன் மூலம் மாட்டிறைச்சி வழக்கில் பசு பாதுகாவலர்களுக்கு முதல் முறையாக தண்டனை வழங்கப்பட உள்ளது. #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com