வேப்பேரி மின்வாரிய அலுவலகத்தில் தீ - 3 பேர் உடல் கருகினர்

சென்னை வேப்பேரி போலீஸ் கமி‌ஷனர் அலுவலகம் எதிரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர்.
வேப்பேரியில் தீவிபத்து ஏற்பட்ட மின்வாரிய அலுவலகம்
வேப்பேரியில் தீவிபத்து ஏற்பட்ட மின்வாரிய அலுவலகம்
Published on

சென்னை:

சென்னை வேப்பேரி போலீஸ் கமி‌ஷனர் அலுவலகம் எதிரில் மின்வாரிய அலுவலகம் இயங்கி வருகிறது.

இன்று காலை 9 மணியளவில் மின் வாரிய அலுவலகத்தில் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர். மின்சாரம் சப்ளை ஆகும் பகுதியிலும், ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது திடீரென மின் கசிவு ஏற்பட்டு தீ பிடித்தது. இதில் மின்வாரிய அதிகாரி சுரேஷ், போர்மென் லாரன்ஸ், ஊழியர் பரணி ஆகிய 3 பேர் மீதும் தீப்பற்றியது.

வலி தாங்க முடியாமல் 3 பேரும் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூச்சல் போட்டனர். இவர்களது அலறல் சத்தத்தை கேட்டு அலுவலகத்தில் இருந்த மற்ற ஊழியர்களும், அந்த வழியாக சாலையில் சென்றவர்களும் சென்று 3 பேரையும் மீட்டனர்.

இருப்பினும் அவர்களது தலைமுடி கருகியது. முகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக 3 பேரும் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் 3 வண்டிகளில் வந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். போலீஸ் கமி‌ஷனர் அலுவலகம் எதிரே எப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தால் கமி‌ஷனர் அலுவலக வளாகத்திலும் பரபரப்பு நிலவியது.

தீ விபத்து காரணமாக உடனடியாக மின் வாரிய அலுவலகத்தில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இதனால் வேப்பேரி பகுதியில் மின் தடை ஏற்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com