வீடு தீப்பிடித்து எரிந்தபோது சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு - தாய், மகன் உயிர் தப்பினர்

காட்டுமன்னார்கோவில் அருகே சிலிண்டர் கசிவினால் வீடு தீப்பிடித்து எரிந்தபோது வீட்டின் கூரை தீப்பிடித்து எரிந்தது. தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போது சிலிண்டர் வெடித்தது. இந்த தீ விபத்தில் தாய், மகன் உயிர் தப்பினர்.
வீடு தீப்பிடித்து எரிந்தபோது சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு - தாய், மகன் உயிர் தப்பினர்
Published on

ஸ்ரீமுஷ்ணம்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் தெற்குஇருப்பு பகுதியை சேர்ந்தவர் இந்திராணி. இவரது மகன் இளைய ராஜா (வயது 37). மாற்றுத் திறனாளி.

நேற்று இரவு இந்திராணி சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது கியாஸ் கசிவு ஏற்பட்டு கூரை வீட்டில் தீப்பிடித்தது.

இதையறிந்த இந்திராணி வீட்டில் படுத்திருந்த தனது மகன் இளையராஜாவை தூக்கி கொண்டு வெளியே ஓடி வந்து உயிர் தப்பினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைக்க முயன்றனர்.

இது குறித்து காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது வீட்டில் இருந்த சமையல் கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த டெலிவி‌ஷன், பீரோ, கட்டில் மற்றும் துணிமணிகள் எரிந்து சேதமானது.

இது குறித்து காட்டுமன்னார்கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடு தீப்பிடித்து எரிந்த போது சிலிண்டர் வெடித்ததால் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com