

தற்போது வங்கிகளில் மற்றும் மத்திய-மாநில அரசு வரவு-செலவு கணக்குகளில் ஏப்ரல் முதல் மார்ச் மாதம் வரை நிதியாண்டு என்று கணக்கிடப்பட்டு வருகிறது. வரி விதிப்பு, நிதி மற்றும் பொருளாதார துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வரும் மத்திய பா.ஜனதா அரசு நிதியாண்டு முறையில் மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளது.
அதன்படி 150 ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும் நிதியாண்டு மாற்றப்பட்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை என கணக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
நிதியாண்டை மாற்றி காலண்டர் ஆண்டுடன் இணைப்பதற்கு பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துவிட்டார். இதைத் தொடர்ந்து நிதியாண்டை மாற்றுவதற்கு தேவையான பணிகளை மத்திய அரசு செய்து வருகிறது.
இதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராய உயர்நிலைக் குழுவை மத்திய அரசு நியமித்தது. கடந்த டிசம்பர் மாதம் இந்தக் குழு தனது அறிக்கையை நிதி அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது.
இதேபோல் நிதியாண்டை மாற்றுவது அவசியம் என நிதி ஆயோக் அமைப்பும் தெரிவித்துள்ளது. இப்போதைய நிதியாண்டு கணக்கு நடைமுறையால் வேலைச் சூழலை குறைந்த அளவே பயன்படுத்திக் கொள்ள முடிகிறது.
மேலும் இப்போது இருக்கும் நிதியாண்டு நடைமுறை, நாட்டின் எந்தவொரு தேசிய கலாச்சார மற்றும் பாரம்பரிய நிதியிலான காரணமும் இல்லாமல் தேர்வு செய்யப்பட்டது என்று நிதி ஆயோக் குறிப்பிட்டுள்ளது.
நிதியாண்டு ஜனவரிக்கு மாற்றப்பட்டால் இந்த ஆண்டு நவம்பர் மாதமே அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம், பட்ஜெட் கூட்டத் தொடரை டிசம்பர் மாதத்துக்கு முன்பே முடிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.
கடந்த ஆண்டு வரை பிப்ரவரி மாத கடைசி வாரத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த, இந்த நடைமுறையை மத்திய அரசு இந்த ஆண்டு மாற்றியது. அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.