நிதி நெருக்கடி: புதுவை அமைச்சர்கள் மீது கவர்னர் கிரண்பேடி தாக்கு

புதுவையின் நிதிநிலை குறித்து உண்மை நிலையை தெரிவித்து தைரியமாக செயல்படுவதற்கு பதிலாக பிறரை குற்றம் சாட்டி வருகிறார்கள் என்று கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் கருத்து பதிவு வெளியிட்டுள்ளார்.
கவர்னர் கிரண்பேடி
கவர்னர் கிரண்பேடி
Published on

புதுச்சேரி:

புதுவை மாநில அரசுக்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நிதி நெருக்கடியால் அரசு ஊழியர்களுக்கு அடுத்த மாதம் (ஜனவரி) சம்பளம் போடக்கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் கந்தசாமி கூறியுள்ளார்.

அதே நேரத்தில் அரசு ஊழியர்களுக்கு வழக்கம் போல் சம்பளம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் நிதி நெருக்கடியை சமாளிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், மத்திய அரசிடம் இருந்து நிதி பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் நாராயணசாமி கூறியுள்ளார்.

இந்த நிலையில் கவர்னர் கிரண்பேடி நிதி நெருக்கடியை கருத்தில் கொண்டு சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளார். இதுகுறித்து அனைத்து துறை செயலாளர்களுக்கும் ஒரு உத்தரவை அனுப்பி உள்ளார்.

அந்த உத்தரவில் யாராக இருந்தாலும் உயர் வகுப்பு பிரிவில் விமான பயணம் மேற்கொள்வது தடை செய்யப்படுகிறது.

அரசு துறைகளில் டெண்டர் விடும்போது, அதற்குரிய பணம் உள்ளதா? என்பதை உறுதி செய்த பின்னரே டெண்டர் விட வேண்டும். பணம் இல்லாமல் டெண்டர் விட்டு ஒருவரையொருவர் குற்றம் சுமத்தி மக்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்த கூடாது. தலைமை செயலாளருடன் கலந்து ஆலோசித்த பிறகே இந்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

அதோடு நிதி நெருக்கடியை சமாளிக்க புதுவை அமைச்சர்கள் தைரியமாக செயல்படுவதற்கு பதிலாக பிறரை குற்றம் சாட்டி வருகிறார்கள் என்று கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் கருத்து பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

புதுவை அரசிடம் இலவச அறிவிப்புகள் மட்டுமே உள்ளன. இது எதிர்காலத்துக்கு தேவையான பழங்களை விதைப்பதற்கு பதிலாக கைக்கு எட்டும் தூரத்தில் உள்ள பழங்களை பறிக்கும் செயலாகும்.

அரசு நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகளும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் குறிப்பிட்ட நாட்களே பணியில் இருக்க கூடியவர்கள். யாரும் இதில் நிரந்தரமாக இருக்கப் போவதில்லை. பணியில் இருப்பவர்கள் விதைக்கலாம். மற்றவர்கள் அறுவடை செய்யலாம். சிலர் இரண்டையும் செய்யலாம். சிலர் மட்டுமே விதைக்காவிட்டாலும் அறுவடை செய்வார்கள்.

இது போன்ற அனைத்து வகையினரையும் நிர்வாகத்தில் கொண்டுள்ளோம். புதுவையின் நிதிநிலை குறித்து உண்மை நிலையை தெரிவித்து தைரியமாக செயல்படுவதற்கு பதிலாக பிறரை குற்றம் சாட்டி வருகிறார்கள். நிதி நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான திட்டங்கள் உள்ளன. அதை யார் செய்வார்கள்?

மக்களுக்கு அரசின் நிதிநிலை குறித்து தெரிந்து கொள்ள உரிமை உள்ளது. அரசுக்கும் அதை சொல்ல வேண்டிய கடமை உள்ளது.

இவ்வாறு அந்த பதிவில் கவர்னர் கிரண்பேடி கூறி உள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com