

புதுடெல்லி:
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி அரசுகள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்துள்ளன. இவற்றின் மீதான இறுதி விசாரணை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவராய், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடந்து வந்தது.
இதில் 4 மாநிலங்களின் வாதங்கள் நிறைவடைந்ததை தொடர்ந்து, அனைத்து தரப்பினரும் தங்கள் தரப்பு இறுதி வாதங்கள், முக்கிய அம்சங்கள் மற்றும் நீர் மேலாண்மை நிபுணர்களின் கருத்துகள் ஆகியவற்றை எழுத்து வடிவில் தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர். பின்னர் வழக்கின் தீர்ப்பையும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
இந்த உத்தரவின் அடிப்படையில் தமிழக அரசு சார்பில் சுமார் 3 ஆயிரத்துக்கு அதிகமான பக்கங்களில் எழுத்து வடிவிலான வாதங்கள் மற்றும் ஆவணங்கள் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் இடம்பெற்றிருந்த முக்கிய அம்சங்கள் வருமாறு:-
தமிழ்நாட்டுக்கு காவிரி டெல்டாவில் மொத்த சாகு படிக்கான பரப்பளவு 27.81 லட்சம் ஏக்கர் என்று காவிரி நடுவர் மன்றம் நிர்ணயித்துள்ளது. இதை 29.2 லட்சம் ஏக்கராக அதிகரித்து உத்தரவிட வேண்டும்.
காவிரி நடுவர் மன்றம் தமிழகத்துக்கான தண்ணீர் தேவையை 192 டி.எம்.சி.யாக நிர்ணயித்துள்ளது. ஆனால் மாநிலத்தின் தேவையை கருத்தில் கொண்டு கூடுதலாக 72 டி.எம்.சி. தண்ணீரை ஒதுக்க வேண்டும். கர்நாடக அரசு தரப்பில் கூறப்பட்ட தமிழக நிலத்தடி நீரை கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது.
கர்நாடக அரசு ஏற்கனவே தாக்கல் செய்துள்ள ஆவணங்களின் அடிப்படையில் அவர்களின் சாகுபடி பரப்பில் 7 லட்சம் ஏக்கரை குறைத்து, அவர்களுக்கு ஒதுக்கியுள்ள தண்ணீரிலும் 98 டி.எம்.சி.யை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அம்சங்கள் அதில் கூறப்பட்டு இருந்தன.