

மும்பை:
மராட்டியம் மாநிலம் சஹ்யாத்ரி மாவட்டத்தில் உள்ள அம்போலி கிராமத்தின் மலைப்பகுதியானது பிரபல சுற்றுலாத் தளமாக உள்ளது. இந்நிலையில், அங்குள்ள கோல்காபூர் பகுதியைச் சேர்ந்த 7 வாலிபர்கள் கடந்த திங்கள் கிழமை மாலை குடித்து விட்டு அப்பகுதியில் உள்ள மலை உச்சியில் வீடியோ எடுத்து விளையாடிக் கொண்டிருந்தனர்.
அவர்களில் இம்ரான் கராடி மற்றும் பிரதாப் ரதோட் என்ற இரு வாலிபர்கள் கையில் பாட்டிலுடன் மலையின் ஓரத்தில் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தனர். அப்போது நிலைதடுமாறி 2000 அடி பள்ளத்தில் வாலிபர் கீழே விழுகிறார். அவர் விழும் போது மற்றொரு வாலிபரையும் சேர்த்து கீழே இழுப்பது வீடியோவில் பதிவாகியுள்ளது.
வாலிபர்கள் கீழே விழுந்ததை அடுத்து அவர்களது நண்பர்கள் போலீசிடம் 2 பேரை காணவில்லை என புகார் அளித்தனர். இதற்கிடையில் அவர்கள் எடுத்த வீடுயோ இணையங்களில் வைரலாக பரவியது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் வீடியோ எடுத்ததை நண்பர்கள் ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அப்பகுதியில் உள்ள கடை மற்றும் மக்களிடம் விசாரணை நடத்தியதில் வாலிபர்கள் கீழே விழுந்தது உறுதி செய்யப்பட்டது. பின்னர் மலையேற்றக் குழுவினர் அவர்களது உடலை மீட்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பல மணிநேர போராட்டத்திற்கு பின் இருவரின் உடலும் பள்ளத்தாக்கிலிருந்து மீட்கப்பட்டது.