வேலூர் பொய்கை, வாழவச்சனூர் மாட்டு சந்தைகள் வெறிச்சோடின - விவசாயிகள் ஏமாற்றம்

கால்நடை சந்தைகளில் இறைச்சிக்காக மாடுகள் விற்க மத்திய அரசு தடை விதித்துள்ளதால் வேலூர் பொய்கை மற்றும் வாழவச்சனூர் மாட்டு சந்தைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
வேலூர் பொய்கை, வாழவச்சனூர் மாட்டு சந்தைகள் வெறிச்சோடின - விவசாயிகள் ஏமாற்றம்
Published on

அணைக்கட்டு:

வேலூர் அருகே உள்ள பொய்கை வாரச்சந்தை மிகவும் பிரபலமானது. வாரம் பிறந்து செவ்வாய்க்கிழமை என்றாலே பொய்கை சந்தை களை கட்டும். கால்நடைகள், கோழி மட்டுமின்றி காய்கறி, விதைகள் போன்றவையும் விற்கப்படுகிறது.

ஆனாலும், பொய்கை சந்தையை மாட்டு சந்தை என்றே அழைப்பர். இதற்கு வேலூர், திருவண்ணாமலை உள்பட ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் காளை, பல்வேறு இன கறவை மாடுகள் விற்பனைக்கு வருகின்றன.

வாரம் ஒருநாள் சந்தையில் மட்டும் ரூ.1 கோடி முதல் ரூ.1½ கோடி வரை வியாபாரம் நடைபெறுகிறது. மாடுகள் விற்பனை மட்டுமே ரூ.1 கோடியை எட்டும். சந்தைக்கு முந்தைய நாள் இரவிலேயே வெளியூர்களில் இருந்து மாடுகள் கொண்டு வந்து இறக்கப்பட்டுவிடும்.

மாடுகளின் பல்லை பிடித்தும், கன்று ஈன்றதை வைத்தும், நாளொன்றுக்கு எவ்வளவு லிட்டர் பால் கறக்கும் என்பதை கேட்டும் இடைத்தரகர்கள் மூலம் விலை நிர்ணயித்து மாடுகள் உடனடியாக விற்கப்படும். இதில் இடைத்தரகர்கள் அதிக லாபம் ஈட்டுவர்.

அதிகாலை முதல் மதியம் வரை மட்டுமே மாட்டுச் சந்தை நடைபெறும். இடை இடையே மற்ற வியாபாரிகள் கடை விரித்து தங்களது பொருட்களை விற்பனை செய்கிறார்கள். அதிக லாபம் கிடைப்பதால் பொய்கை சந்தையை ஏலம் எடுப்பதில் கடும் போட்டி நிலவுகிறது.

ஏலத்தில் அரசியல் குறுக்கீடும் உள்ளது. பல்வேறு கட்சி பிரமுகர்கள் ஏலத்தில் பங்கேற்று கடும் போட்டியை ஏற்படுத்துவார்கள். வழக்கம் போல், இந்தாண்டுக்கான ஏலம் அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 27-ந் தேதி நடந்தது.

ரூ.83 லட்சத்துக்கு பொய்கை சந்தையை பா.ம.க. பிரமுகர் லோகநாதன் என்கிற மலைக்கள்ளன் ஏலம் எடுத்தார். கடந்தாண்டு ரூ.46 லட்சம் மட்டுமே ஏலம் போனது. தற்போது ரூ.38 லட்சம் கூடுதலாக சந்தை ஏலம் எடுக்கப்பட்டது.

இந்த நிலையில், கால்நடை சந்தைகளில் இறைச்சிக்காக மாடுகள் விற்க மத்திய அரசு தடை விதித்துள்ளதால் பொய்கை வாரச்சந்தை இன்று வெறிச்சோடி காணப்பட்டது. வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள விவசாயிகள் மட்டுமே குறைந்த அளவு கறவை மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

இறைச்சிக்காக ஒரு மாடுகள், விற்பனைக்கு கொண்டு வரப்படவில்லை. வழக்கமாக வாரச்சந்தைக்கு வரும் வெளியூர் வியாபாரிகள் யாரும் வரவில்லை. மாடுகள் வரத்து குறைவானதால், ஏலதாரர்கள் அதிக கட்டணம் வசூலிக்க வாய்ப்பிருக்கிறது. இதனால் விவசாயிகள், வியாபாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

இதேபோல், திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா வாழவச்சனூரில் வாரந்தோறும் திங்கட் கிழமையில் வாரசந்தை நடைபெறுவது வழககம்.

இங்கு திருவண்ணாமலை, செங்கம், தண்டராம்பட்டு, தானிப்பாடி, வரகூர், தச்சம்பட்டு, வெறையூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சங்கராபுரம், கள்ளககுறிச்சி, சின்னசேலம், தியாகதுருகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் வளர்ககும் ஆடுகள், மாடுகளை கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம்.

இவ்வாறு சந்தையில் விற்பனை செய்யப்படும் கால்நடைகளை கம்பம், தேனி, நாமக்கல், கோவை, அவிநாசி மற்றும் கேரளா உள்பட வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் வாங்கி செல்வார்கள். ஒவ்வொரு வாரமும் வாரசந்தைக்கு விவசாயிகள் 500-க்கும் மேற்பட்ட மாடுகளை விற்பனைக்காக கொண்டு வருவார்கள்.

இந்த நிலையில், இறைச்சிககாக மாடுகளை விற்பனை செய்யக் கூடாது என்ற மத்திய அரசின் உத்தரவால் நேற்று வாழவச்சனூரில் நடந்த வாரசந்தையும் வெறிச்சோடி காணப்பட்டது. விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட ஒருசில மாடுகளும் விற்பனை ஆகாததால், விவசாயிகள் ஏமாற்றத்துடன் மாடுகளை ஓட்டிச் சென்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com