பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகைக்காக அலைக்கழிக்கப்படும் விவசாயிகள்

பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை பெறுவதில் அலைக்கழிக்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். மேலும் மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் புதிய சேமிப்பு கணக்கு தொடங்க கட்டாயப்படுத்துவதாகவும் தெரிவித்தனர்.
விவசாயிகள்
விவசாயிகள்
Published on

தஞ்சாவூர்:

விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்கி பாதுகாக்கவும், அவர்களுடைய பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பருவம் தவறி பெய்யும் மழை மற்றும் அதிகப் படியான மழையால் ஏற்படும் பயிர் இழப்பினை இந்த திட்டம் ஈடு செய்கிறது.

ஒவ்வொரு பருவத்திலும் வட்டாரத்திற்கு ஏற்ப பயிர்கள் அறிவிக்கப்பட்டு, அவற்றில் சாகுபடி செய்ய உள்ள பயிர்களை விவசாயிகள் காப்பீடு செய்து இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். பொதுசேவை மையங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகள் பிரீமியம் செலுத்தி காப்பீடு செய்து பயன்பெறலாம்.

தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2019-ம் ஆண்டு சம்பா, தாளடி நெல் சாகுபடியை விவசாயிகள் செய்து இருந்தனர். இந்த சாகுபடிக்கு பிரதம மந்திரி பயிர்க் காப்பீடு திட்டத்தின் கீழ் பிரிமீயம் செலுத்தி இருந்தனர். நெல் அறுவடை செய்தபோது மகசூல் மிகவும் குறைந்து இருந்தது. இதனால் இழப்பீட்டு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

அதன்படி தஞ்சை மாவட்டத்திற்கு பிரதம மந்திரி பயிர்க் காப்பீடு திட்டத்தின் கீழ் 2019-ம் ஆண்டு சிறப்பு பருவத்தில் சம்பா, தாளடி நெல் பயிருக்கு காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தினரால் ரூ.67 கோடியே 83 லட்சம் பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகையாக அறிவிக்கப்பட்டது.

விவசாயிகளின் வங்கி கணக்கில் பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வரவு வைக்கப்பட்டு வருகிறது. பயிர் காப்பீடு நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட வருவாய் கிராமம் வாரியான இழப்பீட்டு சதவீத விவரம் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வைத்துள்ள கணக்குகளில் இழப்பீட்டு தொகை வரவு வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள விவசாயிகளுக்கு இன்னும் இழப்பீட்டு தொகை வரவு வைக்கப்படவில்லை. இழப்பீட்டு தொகை வரவு வைக்கப்படுவதில் காலதாமதம் ஏன்? என விவசாயிகள் கூட்டுறவு வங்கி அதிகாரிகளை சந்தித்து விளக்கம் கேட்டனர். அதற்கு மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் புதிய கணக்கு தொடங்க வேண்டும் எனவும், அந்த வங்கி கணக்கில் தான் இனிமேல் இழப்பீட்டு தொகை வரவு வைக்கப்படும் எனவும் தெரிவித்தனர். விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக இழப்பீட்டு தொகை சென்று சேர வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த நடைமுறை கடைபிடிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கிராமங்கள் தோறும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் உள்ளன ஆனால் மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள் அதிக அளவில் இல்லை. இதனால் அந்த வங்கி கிளைகளுக்கு சென்று புதிய கணக்கு தொடங்குவது விவசாயிகளுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. அதுமட்டுமின்றி பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை பெறுவதில் காலதாமதம் ஆவதால் விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்த திட்டத்தை திடீரென அதுவும் கொரோனா காலத்தில் கட்டாயப்படுத்தி நடைமுறைப்படுத்துவதை தவிர்த்தால் நன்றாக இருக்கும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். மேலும் இந்த ஆண்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளின் கணக்குகளில் இழப்பீட்டுத் தொகையை வரவு வைத்து விட்டு, இனிவரும் காலங்களில் மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கலாம் என்பதே அனைத்து விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

இது குறித்து பூதலூரை சேர்ந்த விவசாயி ராஜலிங்கம் கூறும்போது, கிராம தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. கூட்டுறவு வங்கிகளில் கணக்கு வைத்து இருந்தாலும் மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் புதிதாக கணக்கு தொடங்கி, அந்த கணக்கில் இழப்பீட்டு தொகை வரவு வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதற்காக ரூ.500 டெபாசிட் செலுத்தி புதிய வங்கி கணக்கு தொடங்க வேண்டிய நிலை உள்ளது.

ஏற்கனவே கொரோனா பாதிப்பினால் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ள நிலையில் இந்த புதிய நடைமுறையை கட்டாயப்படுத்துவதை ஏற்க முடியாது. முன்கூட்டியே விவசாயிகளிடம் தெரிவித்து விட்டு அடுத்த ஆண்டு முதல் இதை நடைமுறைப்படுத்த வேண்டும். ஏற்கனவே அளிக்கப்பட்டபடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி கணக்குகளில் இழப்பீட்டு தொகையை வரவு வைக்க வேண்டும் என்றார்.

புதுப்பட்டி விவசாயி பரமசிவம் கூறும்போது, பூதலூர் வட்டாரத்தில் உள்ள 7 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள விவசாயிகளை பூதலூர் மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் புதிதாக கணக்கு தொடங்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். ஒரே கிளைக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் சென்று வங்கி கணக்கு தொடங்க தாமதம் ஆகிறது. இதனால் இழப்பீட்டு தொகை பெறுவதும் காலதாமதம் ஆகிறது.

ஏற்கனவே சம்பா, தாளடி சாகுபடி பணியை விவசாயிகள் தொடங்கியுள்ளதால் அவர்களுக்கு பணத்தேவை உள்ளது. இழப்பீட்டு தொகை பெறக்கூடிய விவசாயிகளின் பட்டியல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளுக்கு வரப்பெற்றும் அந்த தொகையை எங்களால் பெற முடியவில்லை. எனவே இதற்கு முன்பு வழங்கப்பட்டதைபோல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி கணக்கில் இழப்பீட்டுத் தொகையை வரவு வைக்க வேண்டும் என்றார்.

இது தொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மனோகரனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய இழப்பீட்டு தொகை எந்த தடங்கலும் இன்றி நேரடியாக அவர்களது கையில் கிடைக்க வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்ட நல்ல திட்டமாகும். இன்சூரன்ஸ் நிறுவனமே இனிமேல் இழப்பீட்டு தொகையை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தி விடும். இதனால் விவசாயிகள் மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் புதிதாக சேமிப்பு கணக்கு தொடங்க முன்வர வேண்டும்.

இனிமேல் எல்லா அரசு திட்டங்களும் இந்த வங்கி கணக்கு மூலமே நடைமுறைப்படுத்த வாய்ப்பு உள்ளது. பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் எல்லா விவசாயிகளின் வங்கி கணக்குகளையும் இணைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. விவசாயிகளுக்கு வழங்கப்படும் ஸ்மார்ட் கார்டு மூலமாகவும் இனி அவர்கள் இழப்பீட்டு தொகையை தங்களது வங்கி கணக்கில் இருந்து பெற்று கொள்ளலாம். எனவே விவசாயிகள் சிரமம் என்று கருதாமல் புதிய சேமிப்பு கணக்கு தொடங்கி பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com