மன்னார்குடியில் பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்
மன்னார்குடியில் பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்

தேர்தலில் பணம் கொடுத்தும் தோல்வி- வாக்காளர்களை வசைபாடி வேட்பாளர் ஒட்டிய போஸ்டர்

மன்னார்குடி அருகே உள்ளாட்சி தேர்தலில் பணம் கொடுத்தும் ஓட்டுபோடாததால் ஆத்திரம் அடைந்த வேட்பாளர் வாக்காளர்களை வசைபாடி ஒட்டிய போஸ்டரால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published on

மன்னார்குடி:

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், வலங்கைமான், மன்னார்குடி, நன்னிலம், கொரடாச்சேரி, குடவாசல், கோட்டூர், நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை ஆகிய 10 ஒன்றியங்களுக்கு கடந்த மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

இதன் வாக்குஎண்ணிக்கை கடந்த 2-ந் தேதி தொடங்கி 2 நாட்கள் நடைபெற்றது. இதில் அ.தி.மு.கவைவிட தி.மு.க அதிக இடங்களை கைப்பற்றியது.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியம் கீழ பனையூர் கிராமத்தில் ஊராட்சி தலைவர் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் தேர்தல் பிரசாரத்தின் போது தன்னுடைய தொகுதி வாக்காளர்களுக்கு தனது சின்னத்தில் வாக்களிக்ககோரி பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

ஆனால் தேர்தலில் அவர் தோல்வியை தழுவியதால் பணம் கொடுத்தும் ஓட்டுபோடவில்லையே என்கிற ஆத்திரத்தில் அவர் போட்டியிட்ட கீழபனையூர் கிராமத்தில் பணம் வாங்கி ஓட்டுப்போடாத வாக்காளர்களை வசைபாடி போஸ்டரை ஒட்டியுள்ளார்.

இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது சட்டப்படி குற்றமாகும். ஆனால் தான் பணம் கொடுத்ததை வெளிப்படையாக போஸ்டர் ஒட்டி வேட்பாளர் தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பையும் உள்ளாட்சி தேர்தல் ஜனநாயக முறைப்படி நடந்துள்ளதா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com