

தமிழக காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கோவில்பட்டிக்கு இன்று வந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசும், அவரது அமைச்சரவையும் துரதிர்ஷ்டவசமானது. பிரதமர் பெயர் கூட தெரியாத அமைச்சர்-அமைச்சர்கள் செய்தியாளர்களை சந்திப்பதை தவிர்க்க வேண்டும்.
தமிழகத்தின் மகாராணி போல் செயல்படும் தமிழிசை சவுந்தரராஜன் மற்றவர்களை வசைபாடுகிறார். குறிப்பாக அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பினை சேர்ந்த திருமாவளவன் குறித்து பேசி வருகிறார். அவருக்கு நாவடக்கம் தேவை. இது போன்று பேசுவதை தமிழிசை தவிர்க்க வேண்டும்.
பொது விநியோக திட்டத்தினை பிரதமர் மோடி சீர்குலைத்த விளைவுதான் சர்க்கரை விலை உயர்வு ஏற்பட்டு உள்ளது. நடிகர்கள் ரஜினி, கமலுக்கு மக்களிடம் நல்ல மரியாதை உள்ளது. அவர்கள் அரசியல் கட்சி ஆரம்பித்து ஒரு குறுகிய வட்டத்திற்குள் சிக்க வேண்டாம் என்பது எனது கருத்து.
தற்போது காங்கிரஸ் கட்சி முடங்கி போய் எவ்வித செயல்பாடுகளும் இல்லாமல் உள்ளது. மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை விநியோகம் செய்ய விடாமல் தடுக்கப்பட்டுள்ளது. பேரம் படியாத காரணத்தினால் குறைந்த விலை மணல் மக்களுக்கு விநியோகம் செய்யவிடாமல் தூத்துக்குடி துறைமுகத்தில் முடக்கி வைக்கப்பட்டு உள்ளது.