விபத்தில் சிக்கிய கார் நொறுங்கி கிடப்பதை படத்தில் காணலாம்.
விபத்தில் சிக்கிய கார் நொறுங்கி கிடப்பதை படத்தில் காணலாம்.

எட்டயபுரம் அருகே கன்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து- 3 பேர் பலி

எட்டயபுரம் அருகே இன்று காலை கன்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் இரு பெண்கள் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
Published on

எட்டயபுரம்:

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பாளையம்பட்டியை சேர்ந்த சிலர் கோவில்பட்டியில் உள்ள உறவினர் இல்ல திருமணத் தில் கலந்து கொள்வதற்காக ஒரு காரில் இன்று காலை வந்தனர். அந்த காரை பாளையம்பட்டியை சேர்ந்த கண்ணன் மகன் சுமன்(வயது 24) என்பவர் ஓட்டி வந்தார். காரில் மொத்தம் 6பேர் இருந்தனர்.

இந்நிலையில் கோவையில் இருந்து சரக்குகளை ஏற்றிக் கொண்டு தூத்துக்குடி துறைமுகத்திற்கு ஒரு கன்டெய்னர் லாரி வந்தது. அந்த லாரியை தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் நிலக்கோட்டை நடுத்தெருவை சேர்ந்த முருகன்(36) என்பவர் ஓட்டிவந்தார்.

மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எட்டயபுரம் அருகே உள்ள சிந்தலக்கரை-துரைச்சாமி புரம் விலக்கு அருகே வந்த போது லாரியை சாலையோரத்தில் நிறுத்தி விட்டு காலை கடனை கழிப்பதற்காக டிரைவர் சென்றார். பின்னர் அவர் லாரியில் அமர்ந்து லாரியை இயக்க முயற்சித்தார்.

அப்போது அருப்புக்கோட்டையில் இருந்து கோவில்பட்டி திருமண விழாவில் பங்கேற்க வந்தவர்களின் கார், எதிர்பாராத விதமாக கன்டெய்னர் லாரியின் பின்புறமாக பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது. காரில் இருந்த பாளையம்பட்டி மணிநகரை சேர்ந்த வீராச்சாமி என்பவரின் மனைவி ராஜம்மாள்(55), ராம் மோகன்(56), ராமசாமி என்பவரின் மனைவி சரோஜா(47) ஆகிய 3 பேர் சம்பவஇடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

மேலும் காரின் டிரைவர் சுமன், அவரது தம்பி ராஜ்குமார்(17) மற்றும் செல்வலட்சுமி(59) ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், எட்டயபுரம் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய 3பேரையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் விபத்தில் பலியான ராஜம்மாள், ராம்மோகன், சரோஜா ஆகிய 3பேரின் உடல்களை மீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த கோர விபத்தது குறித்து தகவலறிந்த தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த எட்டயபுரம் போலீசார், கன்டெய்னர் லாரி டிரைவர் முருகனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமண நிகழ்ச்சிக்காக வந்த 3 பேர் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com