ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடிய கைதி ஆந்திராவில் கைது

ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடிய கைதியை போலீசார் ஆந்திராவில் வைத்து கைது செய்துள்ளனர்.
கைதான சந்தோஷ்குமார்
கைதான சந்தோஷ்குமார்
Published on

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள சனவேலியை சேர்ந்தவர் சிவசங்கரன். கடந்த 6-ந் தேதி காலையில் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று இருந்தார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர் வீட்டின் கதவை உடைந்து உள்ளே புகுந்தான். பின்னர் பீரோவில் இருந்த 13 பவுன் நகை, 2 ஜோடி கொலுசு ஆகியவற்றை திருடினான்.

அதற்குள் அக்கம் பக்கத்தினர் வீடு திறந்து கிடந்திருப்பதை கண்டு அங்கு திரண்டனர். இதை அறிந்த திருடன் உடனே அங்கிருந்து தப்ப முயன்றான்.

ஓட்டம் பிடித்த திருடனை அப்பகுதி பொதுமக்கள் விரட்டிச் சென்று பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதில் அவனுக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் அந்த திருடனை ஆர்.எஸ்.மங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில் அவன் சென்னை வியாசர்பாடியை சேர்ந்த சந்தோஷ் குமார் (வயது 28) என தெரியவந்தது. போலீசார் அவனை கைது செய்தனர்.

பொதுமக்கள் தாக்கியதில் காயம் அடைந்த சந்தோஷ்குமாரை போலீசார் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஆஸ்பத்திரியில் தொண்டி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுல்தான், போலீஸ்காரர்கள் மூர்த்தி, பாலமுருகன், முத்து ராமலிங்கம் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் அதிகாலையில் கழிப்பறைக்கு செல்வதாக கூறி விட்டுச் சென்ற சந்தோஷ் குமார் போலீஸ்காரர்களை ஏமாற்றி விட்டு அங்கிருந்து தப்பினான்.

பாதுகாப்பு பணியில் கவனக்குறைவாக இருந்ததாக கூறி சப்-இன்ஸ்பெக்டர் சுல்தான் உள்பட 4 போலீஸ் காரர்களையும் சஸ்பெண்டு செய்து மாவட்ட போலீஸ் சூப்பரண்டு ஓம்பிரகாஷ் மீனா உத்தரவிட்டார்.

தப்பி ஓடிய கைதியை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இதில் சப்-இன்ஸ்பெக்டர் தாஸ், தலைமை காவலர் செல்லதுரை, போலீஸ்காரர்கள் ராஜ்குமார், ராஜேஸ் மற்றும் சஸ்பெண்டு செய்யப்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுல்தான், போலீஸ்காரர்கள் மூர்த்தி, பாலமுருகன், முத்து ராமலிங்கம் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர்.

இவர்கள் சென்னை வியாசர்பாடிக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது சந்தோஷ்குமார் ஆந்திர மாநிலம் நெல்லூரை அடுத்த தடா கிராமத்தில் பதுங்கி இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்தனர்.

அதற்குள் தகவல் அறிந்த சந்தோஷ்குமார் ஆந்திர- தமிழகம் எல்லையையொட்டி உள்ள ஆரணி காட்டுப்பகுதிக்குள் சென்று பதுங்கினான். ஆனாலும் போலீசார் துப்பு துலக்கி கடும் சிரமத்திற்கு பின்னர் இன்று அதிகாலை சந்தோஷ் குமாரை கைது செய்தனர்.

அவனை போலீசார் ராமநாதபுரத்திற்கு அழைத்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com