

கொழிஞ்சாம்பாறை:
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கோதமங்கலம் வடாத்துப்பாறையை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மகன்கள் சோமன் (வயது 38). மனோஜ் (35). சோமன் பாறைகளுக்கு வெடி மருந்து வைத்து வெடிக்கும் தொழில் செய்து வருகிறார். அண்ணன்- தம்பி இருவருக்கும் திருமணமாகவில்லை.
இந்நிலையில் இன்று காலை சோமன் மற்றும் அவரது தம்பி மனோஜ் ஆகியோர் குடிப்போதையில் தந்தையிடம் சென்றனர். அண்ணன்- தம்பி 2 பேரும் சேர்ந்து தந்தையிடம் தகராறு செய்தனர். பின்னர் வீட்டுக்கு 250 அடி தூரமுள்ள ஒரு பாறையில் இருவரும் அமர்ந்தனர்.
சிறிது நேரத்தில் பயங்கர சத்தத்துடன் அந்த பாறை வெடித்து சுக்குநூறாக சிதறியது. வெடி சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ஓடி வந்துபார்த்தபோது சோமன், மனோஜ் ஆகியோர் உடல் சிதறி ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்தனர்.
இது குறித்து கூட்டுப்புழா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அண்ணன்- தம்பியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோதமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து கூட்டுப்புழா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில் குடிபோதையில் தந்தையிடம் தகராறு செய்த பின்னர் சோமன் வைத்திருந்த வெடி மருந்தை எடுத்துக் கொண்டு பாறையை துளையிட்டுள்ளனர். அதில் மருந்தை வைத்துவிட்டு இருவரும் அதே பாறையில் அமர்ந்து வயர் மூலம் வெடிக்க செய்துள்ளனர்.
வெடி மருந்து வெடித்ததால் உடல் சிதறி சோமன் அவரது தம்பி மனோஜ் ஆகியோர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்ததாக போலீசார் கூறினர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.