திருப்பூரில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

திருப்பூரில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். திருமணமான 7 மாதத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
திருப்பூரில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
Published on

திருப்பூர்:

திருப்பூர் காதர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருக்கு சொந்தமான இடத்தில் கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்த ஆதிஷ்பாண்டியன் (வயது 26) என்பவர் தங்கி இருந்து கம்பி கட்டும் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் வழக்கம் போல கட்டிட பணியில் ஆதிஷ்பாண்டியன் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது கீழ் தளத்தில் இருந்து கம்பி கட்டும் பணிக்கு தேவையான கம்பிகளை சுமந்து கொண்டு மேல் தளத்திற்கு சென்று கொண்டிருந்தார். 3-வது மாடியை அடைந்த போது ஆதிஷ்பாண்டியன் சுமந்து சென்று கொண்டிருந்த கம்பியின் ஒரு பகுதி அருகில் சென்று கொண்டிருந்த மின்சார கம்பியில் உரசியது. இதனால் ஆதிஷ்பாண்டியன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 3-வது மாடியில் இருந்து அவர் கீழே தூக்கி வீசப்பட்டார். இதில் தலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்திஆதிஷ்பாண்டியனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆதிஷ்பாண்டியன் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு தான் கவுசல்யா என்ற பெண்ணை திருமணம் செய்தார். திருமணம் முடிந்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருப்பூர் வந்த இவர், காதர்பேட்டையில் தங்கி இருந்து, அங்கு கம்பி கட்டும் வேலை செய்து வந்தது தெரியவந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com