தேர்தல் விதிகளை மீறியதாக ராகுல் மீதான நோட்டீஸ்: திரும்ப பெற்றது தேர்தல் ஆணையம்
தேர்தல் விதியை மீறி டி.வி. சேனல்களுக்கு பேட்டி அளித்தது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அனுப்பிய நோட்டீசை தேர்தல் ஆணையம் இன்று திரும்பப் பெற்றது.
குஜராத் சட்டசபை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கு முன்னாள் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் காந்தி, குஜராத் தேர்தல் பற்றி அளித்த பேட்டிகள், சில டெலிவிஷன் சேனல்களில் ஒளிபரப்பானது. ஓட்டுப்பதிவு முடிவதற்கு முந்தைய 48 மணி நேரத்துக்குள், தேர்தல் தொடர்பான பேட்டியை ஒளிபரப்புவது, மக்கள் பிரதிநிதித்துவ சட்ட விதிகளை மீறிய செயல் ஆகும். இதுபற்றி தேர்தல் ஆணையத்துக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து, அந்த பேட்டிகளை ஒளிபரப்புவதை உடனே நிறுத்துமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. மேலும், இந்த விதிமீறலில் ஈடுபட்டவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு குஜராத் தலைமை தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டது.
அத்துடன், பேட்டி அளித்த ராகுல் காந்தியிடம் விளக்கம் கேட்டு, அவருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. வரும் 18-ந் தேதி மாலை 5 மணிக்குள் விளக்கம் அளிக்குமாறு கூறியது.

