ஆர்.கே நகர் இடைத்தேர்தல் பணியில் தேர்தல் ஆணையம் தீவிரம்: தேர்தல் அதிகாரி நியமனம்

ஆர்.கே நகர் இடைத்தேர்தல் நடத்தும் அதிகாரியாக வேலுச்சாமியும், உதவி அலுவலர்களாக வட்டாட்சியர்கள் சுப்பிரமணியன் மற்றும் முருகேசன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆர்.கே நகர் இடைத்தேர்தல் பணியில் தேர்தல் ஆணையம் தீவிரம்: தேர்தல் அதிகாரி நியமனம்
Published on

சென்னை:

ஜெயலலிதா மறைந்ததால் காலியான சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவிக்கை வெளியிட்டது. ஆனால், வாக்காளர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டது கண்டறியப்பட்டதால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

பின்னர் தேர்தலை நடத்த வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் டிசம்பர் 31-ம் தேதிக்குள் இடைத்தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். ஆனால் போலி வாக்காளர்களை நீக்கிய பிறகே இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

ஆர்.கே.நகர் தொகுதியில் 45 ஆயிரத்து 819 போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டு விட்டனர் என்று தேர்தல் ஆணையம் கூறியதைடுத்து அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. அத்துடன், ஏற்கனவே உத்தரவிட்டபடி டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நடத்தவேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதனையடுத்து, டிசம்பர் 21-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என இன்று காலை அறிவிக்கப்பட்டது. டிசம்பர் 24-ம் தேதி வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தேர்தலுக்கான பணியில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

ரிப்பன் மாளிகையில் மாவட்ட தேர்தல் அதிகாரி, காவல் துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. மேலும், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஏ கே ஜோதி, தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்காணியுடன் ஆலோசனை நடத்தினார்.

ஆதிதிராவிடர் நலத்துறை இணை இயக்குநராக உள்ள வேலுச்சாமி தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். உதவி அலுவலர்களாக வட்டாட்சியர்கள் முருகேசன், சுப்பிரமணி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தண்டையார்பேட்டை மண்டல உதவி அலுவலரான விஜயகுமார் வாக்காளர் பதிவு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com