

ஜெயலலிதா மறைவால் காலியான ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்த கடந்த மார்ச் மாதம் அறிவிப்பு வெளியானதும் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை பெற அ.தி.மு.க. அம்மா அணிக்கும், அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணிக்கும் போட்டி ஏற்பட்டது.
இரு அணியினரும் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கொண்டாடினார்கள். இதனால் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் கமிஷன் முடக்கியது.
இதற்கிடையே பணப்பட்டுவாடாவால் இடைதேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில் இரு அணிகளும் இரட்டை இலையை மீட்க தேர்தல் ஆணையத்தை அணுகினார்கள். பிறகு அதிகாரிகள் உத்தரவிட்டதைத் தொடர்ந்து இரு அணியினரும் லட்சக்கணக்கில் ஆவணங்களைத் தயாரித்து தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணியும், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இரு அணிகளும் இணைந்தனர். இதனால் இரட்டை இலைக்கான போட்டி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வுக்கும் டி.டி.வி. தினகரன் அணியினருக்கும் இடையிலான போட்டியாக மாறியது.
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஒருங்கிணைந்து புதிய ஆவணங்களை தாக்கல் செய்தனர். அது போல டி.டி.வி.தினகரன் தரப்பினரும் நிறைய ஆவணங்களை தாக்கல் செய்தனர்.
அதன் அடிப்படையில் தலைமை தேர்தல் கமிஷன் இரு தரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தினார்கள். இரு அணி வக்கீல்களும் இரட்டை இலையை தங்களுக்கே தர வேண்டும் என வாதிட்டனர். விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பை வெளியிடுவதை தேர்தல் கமிஷன் ஒத்தி வைத்தது.
அ.தி.மு.க. இரு அணிகள் தாக்கல் செய்த ஆவணங்கள் மற்றும் விசாரணை தகவல்களை தேர்தல் கமிஷன் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வு முடிந்த நிலையில் தீர்ப்பை வெளியிட அதிகாரிகள் தயாராகி உள்ளனர். அடுத்த சில தினங்களில் ஓரிரு நாட்களில் தீர்ப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்பதைப் பொருத்து தமிழக அரசியலில் அடுத்தக்கட்டமாக பல அதிரடி நிகழ்வுகளும், மாற்றங்களும் நடக்கக்கூடும் என்று தெரிகிறது. இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால் அது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.
தினகரன் அணியினர் அத்தகைய முடிவை எதிர் பார்ப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
அதே சமயத்தில் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி அணிக்கு கிடைத்தால், அது தினகரன் அணிக்கு கடும் பாதிப்பை உருவாக்கும். அத்தகைய தீர்ப்பு வந்தால் அ.தி.மு.க. கட்சியும் முழுமையாக எடப்பாடி-ஓ.பி.எஸ். அணிக்கு சென்று விடும்.
இந்த அந்தஸ்தைப் பயன்படுத்தி எடப்பாடி பழனிசாமி அணியினர், தினகரன் ஆதரவு எம்.பி.க்களின் பதவியை பறிக்கும் நடவடிக்கையில் இறங்குவார்கள் என்று தெரிகிறது.
தினகரனுக்கு ஆதரவாக பாராளுமன்ற மக்களவையில் நாகராஜன், செங்குட்டுவன், உதயகுமார் ஆகியோரும் மேல் சபையில் நவநீதகிருஷ்ணன், விஜிலா சத்தியானந்த், கோகுல கிருஷ்ணன் ஆகியோர் என 6 எம்.பி.க்கள் உள்ளனர். இவர்களில் சிலர் பாராளுமன்ற நிலைக் குழுக்களில் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர்.