

சென்னை:
இங்கிலாந்தில் உள்ள ‘பார்க்லே’ வங்கியில் ரூ.1 கோடியே 4 லட்சத்து 93 ஆயிரம் அமெரிக்க டாலர் மற்றும் ரூ.44 லட்சம் இங்கிலாந்து பவுண்டுகளை ‘டிப்பர் இன்வெஸ்ட்மெண்ட்’ என்ற நிறுவனத்தின் பெயரில் சட்டவிரோதமாக முதலீடு செய்தது தொடர்பாக கடந்த 1996-ம் ஆண்டு டி.டி.வி.தினகரன் மீது மத்திய அமலாக்கப்பிரிவினர் அந்நிய செலாவணி மோசடி வழக்கைப்பதிவு செய்தனர்.
இதேபோல, ஐரோப்பிய நாடுகளில் ‘ஹாப்ஸ்கேரப்ட் ஹோல்ட்’ என்ற பெயரில் ஹோட்டல் தொடங்குவதற்காக ‘டிப்பர் இன்வெஸ்ட் மெண்ட்’, ‘டெண்டி இன் வெஸ்ட்மெண்ட்’, ‘பேனியன் ட்ரீ’ ஆகிய 3 நிறுவனங்கள் சார்பில் ‘பார்க்லே’ வங்கியில் ரூ. 36.36 லட்சம் அமெரிக்க டாலர் மற்றும் ரூ.1 லட்சம் பவுண்டுகளை முறைகேடாக முதலீடு செய்தது தொடர்பாவும் தினகரன் மீது மற்றொரு அன்னிய செலாவணி வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இந்த 2 வழக்குகளும் நீண்ட காலமாக எழும்பூர் பொருளாதார குற்றவியல் கோர்ட்டில் நிலுவையில் இருந்து வந்தது.
இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டில் பிறப்பித்த உத்தரவின் படி, இந்த வழக்குகளின் விசாரணை கடந்த பிப்ரவரி மாதம் முதல் வேகம் பிடித்துள்ளது.
இதில், முதல் வழக்கில் தினகரனிடம் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி எழும்பூர் கோர்ட்டு குற்றச்சாட்டு பதிவு செய்தது.
அப்போது, தனது தரப்பு வாதங்களை எடுத்துரைக்க போதிய வாய்ப்புகளை தரவில்லை என்றும், எனவே, அந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் தினகரன் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரமேஷ், அந்நிய செலாவணி மோசடி வழக்கை விசாரிக்க எழும்பூர் கோர்ட்டுக்கு இடைக்கால தடை விதித்து கடந்த 7-ந் தேதி உத்தரவிட்டார். இந்த தடையை நீக்க கோரி அமலாக்கப்பிரிவு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், 20 ஆண்டுகளுக்கு பின்னர் இப்போது தான் வழக்கு விசாரணை தொடங்கியுள்ளது. தினகரனுக்கு அனைத்து வாய்ப்புகளும் கொடுக்கப்பட்டது. வழக்கை மேலும் இழுத்தடிக்க இப்படி ஒரு மனுவை அவர் தாக்கல் செய்துள்ளார்’ என்றும் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து இந்த மனு மீதான தீர்ப்பை நீதிபதி தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார்.
இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை கடந்த 24-ந்தேதி நடந்தது. நீதிபதி ரமேஷ் பிறப்பித்த உத்தரவில் தினகரன் மீதான குற்றச்சாட்டுப் பதிவின் போது அவரது தரப்பு வாதத்தை எடுத்துரைக்க சரியான வாய்ப்புகள் தரப்படவில்லை என மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பொதுவாக இதுபோன்ற முக்கியமான வழக்குகளில் குற்றச்சாட்டுப்பதிவு தான் வழக்கு விசாரணைக்கே முக்கியமானதாகும்.
எனவே தினகரன் மீது கடந்த ஏப்ரல் 19-ந் தேதி பதியப்பட்ட குற்றச்சாட்டுகளை ரத்து செய்கிறேன். எழும்பூர் கோர்ட்டு வருகிற 31-ந் தேதிக்குள், ஏதேனும் ஒருநாளில் மீண்டும் அவரிடம் குற்றச்சாட்டுப் பதிவை நடத்த வேண்டும். அதேபோல, தினகரன் மீதான வழக்கை தினந்தோறும் என்ற அடிப்படையில் 3 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்கவேண்டும்’ என்றும் உத்தரவிட்டார்.
இந்த வழக்கு விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. அப்போது தினகரன் எழும்பூர் கோர்ட்டில் ஆஜரானார். அவர் மீது புதிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. தன் மீதான குற்றச்சாட்டுகளை தினகரன் மறுத்தார். பின்னர் வழக்கு விசாரணை வருகிற 3-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
கோர்ட்டில் இருந்து வெளியில் வந்த தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் ‘நீதியின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது’ என்று தெரிவித்தார்.